நீட் தேர்வு விவகாரத்தில், தமிழக அரசாணை தடை செய்யப்பட்டதை எதிர்த்து, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மருத்துவ படிப்பில் நீட் தேர்வு என்ற முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி தேர்வையும் நடத்தி முடித்தது.  இதில் தமிழத்தை சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பின் தங்கினர்.

இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கப்பட வேண்டும் என்று தமிழக அமைச்சர்கள், மத்திய அரசாங்கத்திடம் முறையிட்டு வருகின்றனர்.

தமிழக மருத்துவர் மாண சேர்க்கையில் 85 சதவீதம் உள் இட ஒதுக்கீடு பெறும் வகையில், தமிழக அரசு அரசாணை கொண்டு வந்தது. 

இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. மாணவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை அடுத்து, தமிழக அரசின் அரசாணைக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

உயர்நீதிமன்ற தடையை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசாணையை ரத்து செய்தது தடை செய்ய முடியாது என்றும், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

கல்வியில் சமநிலை ஏற்பட வேண்டும் என்பதால்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

அதாவது மாநில பாடத்திட்டம், சிபிஎஸ்இ மாணவர்களுக்கிடையே பாரபட்சம் காட்டுவதை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர். 

நாடு முழுவதும ஒரு முறை பின்பற்றப்படும்போது, நீங்கள் மட்டும் அதில் வேறுபடுவது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால், மத்திய அரசிடம் மட்டுமே தமிழக அரசு முறையிடும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.