ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ஒரு மேஜர் உட்பட இரண்டு வீரர்கள் வீர மரணமடைந்தனர். 

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள மாட்ரிபக் சொய்போரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து, மத்திய ரிசர்வ் படையினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் கூட்டாக இணைந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்கள் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

அப்போது அங்கிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினர். ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு மேஜர் உள்பட இரண்டு ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னதாக, குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஒருவன், கடந்த மே மாதம் காஷ்மீர் வங்கியில் நடந்த கொள்ளையில் தொடர்புடையவன் என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.