பாலியல் பலாத்கார வழக்கில் நடிகை பாவனாவின் பெயர் மற்றும் படத்தை பயன்படுத்திய பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று, தமிழக மகளிர் ஆணையத்தை கேரள மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கேட்டு அவர் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு திலீப் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு ஏற்கப்பட்டு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என்கிற விதி உள்ளது.

ஆனால் பாவனா மிகவும் பிரபலமான நடிகை என்பதால் அவரது பெயர் மற்றும் புகைப்படங்களுடன் தமிழக பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இது விதி மீறல் என்று கேரள மகளிர் ஆணையம் கூறி வருகிறது. இந்த நிலையில், தமிழக மகளிர் ஆணையம் மற்றும் செய்தித் தொடர்புத் துறைக்கு கேரள மகளிர் ஆணையம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் நடிகை பாவனாவின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டு வரும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.