சீருடையில் மீன் விற்ற கல்லூரி மாணவிக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தம்மானம் பகுதியை சேர்ந்தவர் 21 வயதாகும் ஹானன். இவர், தனது வீட்டில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் தொடுபுழாவில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அன்றாடம் சைக்கிளில் படிக்கச் செல்லும் இவரது குடும்பம் கடுமையான வறுமையில் வாடுகிறது. குடும்பத்தின் வறுமையை போக்கும் வகையில் பகுதிநேர தொழில் ஒன்றை செய்ய ஹானன் முடிவு செய்துள்ளார்.

 

இதன்படி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும்போது, சைக்கிளில் மீன்விற்றபடியே வீட்டுக்கு வர தொடங்கினார். வருமானம் கிடைத்ததோடு, கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வருவது எளிதாக இருந்தது என்பதால், இதனை வாடிக்கையாகச் செய்ய தீர்மானித்தார்.இங்குதான் சர்ச்சை வெடித்தது. மாணவி ஒருவர் சீருடையில் மீன் விற்பதை கண்ட சிலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இதையடுத்து, ஹானனுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது. 

இதில், மாணவி ஹானன் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும், அதற்கான புரோமோஷனுக்காகவே இப்படி மீன் விற்பதை போல நடித்தார் என்றும் தகவல் வெளியானது. இதனை பலரும் உண்மை என்றே நம்பிவிட்டனர். இதன்பேரில், அவர் மீன் விற்கும் பகுதிகளில் அன்றாடம் திரளும் பொதுமக்கள், மாணவியை கடுமையாக சாடுகின்றனர். அவரிடம் வம்பு இழுத்து, தாக்குதல் நடத்துவதையும் வாடிக்கையாக செய்து வருகின்றனர். இதனால் தனது வாழ்க்கை பாதிப்பதாக, மாணவி ஹானன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். 

அன்றாட வாழ்க்கைச் சூழல் காரணமாக, மீன் விற்று வருகிறேன். தனிப்பட்ட விளம்பர நோக்கம் எதுவும் இல்லை. இதனை புரிந்துகொள்ளாமல் பலர் என்மீது தாக்குதல் நடத்துகின்றனர். போலீசார் எனக்கு பாதுகாப்பு தரவேண்டும், என்று மாணவி ஹானன் கூறியிருந்தார். இதற்கு உடனடியாக, மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பிழைப்புக்காக மீன் விற்கும் மாணவியை ஏன் இப்படி டார்ச்சர் செய்கிறீர்கள் என்று, கேரள மக்களை அவர் கண்டித்துள்ளார்.

இதற்கிடையே, மாணவி ஹானன் விவகாரத்தில் முறைகேடாக நடைபெறுவோருக்கு, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவிக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி அவர் அறிவுறுத்தியுள்ளார்.