அடித்து கொல்லப்பட்ட தப்ரோஸ் அன்சாரி.. வழக்கில் வெளியான தீர்ப்பு.. குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை!
ஜார்க்கண்டில் தப்ரேஸ் அன்சாரி என்ற 24 வயது இளைஞர், ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். 4 ஆண்டுகள் கழித்து தற்போது அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஜார்க்கண்டில் தப்ரேஸ் அன்சாரி என்ற 24 வயது இளைஞர், ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, செராய்கேலா நீதிமன்றம் இன்று புதன்கிழமை வெளியிட்ட தீர்ப்பின்படி, அந்த கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
24 வயதான தப்ரேஸ் அன்சாரி, கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் நள்ளிரவில், தாட்கிடி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் திருட முயன்றதாகக் கூறப்பட்டது. அப்போது 13 பேர் கொண்ட கும்பல் அவரை கட்டிவைத்து சரமாரியாக தாக்கினர்.
பின்னர் அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், ஆனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அந்த இளைஞன் 22 ஜூன் 2019ல் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தப்ரேஸின் மனைவி சாஹிஸ்தா பர்வீன், பிரகாஷ் மண்டல் என்ற நபர் மீதும், அடையாளம் தெரியாத மற்ற சிலர் மீதும் புகார் அளித்து, கொலை வழக்கு பதிவு செய்தார்.
இதையும் படியுங்கள் : என்சிபி கட்சியின் தேசியத் தலைவர் பதவியில் இருந்து சரத் பவாரை நீக்குகிறார் அஜித் பவார்
ஆனால் பிரேதபரிசோதனை முடிவில் தப்ரோஸ் மாரடைப்பால் இறந்ததாக அறிக்கை வந்த நிலையில், குற்றவாளிகள் மீது போடப்பட்ட செக்ஷன் 302 கொலை வழக்கு மாற்றப்பட்டு, அவர்கள் மீது செக்ஷன் 304ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அன்சாரியை தூணில் கட்டி வைத்து அடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. அவரை அடித்து துன்புறுத்தியவர்கள் அவரை, 'ஜெய் ஸ்ரீ ராம்' மற்றும் 'ஜெய் ஹனுமான்' என்று கோஷமிடும்படி வற்புறுத்துவதையும் வீடியோவில் காண முடிந்தது.
இந்நிலையில் சுமார் 4 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் குற்றவாளிகள் 10 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட கணவன்; கட்டையால் அடித்து கொன்ற மனைவி