வீட்டிற்கு வெளியே கிடந்த ஷூவை திருடிய உணவு டெலிவரி செய்யும் நபர்!
வீட்டிற்கு வெளியே கிடந்த காலணிகளை ஸ்விகி நிறுவனத்தில் டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் திருடி செல்வது போன்ற சிசிடிவி காட்சிகளை வெளியாகி வைரலாகி வருகிறது
ஸ்விகி இன்ஸ்டாமார்ட் டெலிவரி செய்யும் நபர் ஒருவர் தலைநகர் டெல்லி அருகே குருகிராமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே வைக்கப்பட்டிருந்த ஒரு ஜோடி காலணிகளை திருடும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் டெலிவரி செய்யும் அந்த நபர் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டுகளில் ஏறுகிறார். பின்னர், தான் கொண்டு வந்த பார்சலை குறிப்பிட்ட வீட்டில் டெலிவரி செய்கிறார். தொடர்ந்து அங்கிருந்து படிக்கட்டுகளில் கீழே இறங்கும் அந்த நபர் அங்கு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு தன்னிடம் இருந்த துண்டினால் தனது முகத்தை துடைத்துக் கொண்டு அதே துண்டில் வீட்டின் வெளியே கிடந்த ஒரு ஜோடி காலணிகளை திருடி கொண்டு செல்லும் காட்சிகள் அந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரோஹித் அரோரா என்பவர் தனது நண்பர் இந்த சம்பவம் நேர்ந்ததாக பதிவிட்டுள்ளார். “Swiggy's drop and pickup Serviceஇன் ஒரு டெலிவரி பாய் எனது நண்பரின் காலணிகளை (Nike) எடுத்துக்கொண்டார். ஆனால், ஸ்விகி அவரது விவரத்தை கூட பகிர்ந்து கொள்ள மறுக்கிறது.” என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை அவர் வெளியிட்டதில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் அதனை பார்வையிட்டு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அவரது பதிவு வைரலானதையடுத்து, தங்களுக்கு உதவும் பொருட்டு தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்புமாறு ஸ்விக்கி கேர்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், அதற்கும் ஸ்விகி எந்த பதிலும் அனுப்பவில்லை. இதுதொடர்பான ஸ்கீர்ன்ஷாட்டையும் பகிர்ந்து ரோகித் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.