Rajasthan education departments magazines sexist advice to women to stay fit
பெண்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள, வீட்டு வேலைகளான துணி துவைத்தல், தரையை சுத்தம் செய்தல், கையால் மாவு ஆட்டுதல் போன்றவற்றை செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில கல்வித்துறை சார்பில் வெளியிடப்படும் மாத இதழில் அறிவுரைகூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில கல்வித்துறை சார்பில் மாதந்தோறும் ‘ஷிவிரா’ எனும் பத்திரிகை ஆசிரியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் நவம்பர் மாதத்துக்கான இதழில் பெண்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது குறித்த குறிப்பு தரப்பட்டுள்ளது.
அதில், பெண்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள, வீட்டு வேலைகள் செய்ய வேண்டும். குறிப்பாக துணி துவைத்தல், தரையை சுத்தம் செய்தல், கையால் மாவு ஆட்டுதல் போன்ற வேலைகளைச் செய்தால், உடல் சீராக இருக்கும் என அறிவுரை தரப்பட்டுள்ளது.
பெண்கள் மது, குளிர்பானங்களான பெப்சி, கோக் உள்ளிட்ட எதையும் அருந்தக்கூடாது. அதிகாலையில் எழுந்து நடைபயிற்சி, ஓடுவது, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடலாம். குழந்தைகளுடன் விளையாடுவது, தனியாக காலையில் 15 நிமிடங்கள் வரை சத்தமாகச் சிரிப்பது ஆகியவை உடலை ஆரோக்கியமாக வைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல்வேறு துறைகளில் முன்னேறி வரும் நிலையில், பாலியல் பாகுபாட்டுடன் பெண்கள் உடலைக் கட்டுக்கோப்பைக வைக்க வீட்டு வேலைகள்தான் செய்ய வேண்டும் என மாநில கல்வித்துறையே அறிவுரை கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
