எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 146 பேர் சஸ்பெண்ட்.. எழும் கண்டன குரல் - INDIA Bloc தலைவர்கள் ஒன்றிணைந்து போராட்டம்!
INDIA Bloc Leaders Protest : நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின் போது 146 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக இந்தியா முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று வெள்ளிக்கிழமை நாடு தழுவிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின் போது 146 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக இந்தியா முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று வெள்ளிக்கிழமை டிசம்பர் 22ம் தேதி நாடு தழுவிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் INDIA Blocஐ சேர்ந்த தலைவர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
கடந்த டிசம்பர் 13 லோக்சபா பாதுகாப்பு மீறல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை அளிக்கக் கோரி, சபையின் முன்பு ஒன்றுகூடி போராட்டம் நடத்தியதற்காக, 146 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஜெய்ராம் ரமேஷ், ஏ ராஜா, கவுரவ் கோகோய், முகுல் வாஸ்னிக், ஏ ராஜா மற்றும் நசீர் உசேன் உட்பட இரண்டு டஜன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜந்தர் மந்தர் முன்பு நின்று போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது "இந்தியாவின் ஜனநாயகத்தின் மீது கறை" என்று கூறினார்.
"மேலும் நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக 146 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாங்கள் இல்லாத நேரத்தில் அவர்கள் (அரசு) மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களை நிறைவேற்றியுள்ளனர். அவர்கள் ஜனநாயகத்தை மதிப்பதில்லை, இது தேசத்திற்கு சாதகமாக இருக்காது," என்று அவர் கூறினார்.
அதே போல கேரளாவில், திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவன் அருகே, 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) முற்றுகைப் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.