ராகுல் காந்தியின் "எக்ஸ்" கணக்கை முடக்குங்கள்.. தேர்தல் ஆணையத்திற்கு பாஜக கடிதம்.. ஏன்? என்ன நடந்தது?
Letter Against Rahul Gandhi : இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நடந்து வரும் இந்த நேரத்தில் பாஜக அரசு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எக்ஸ் (ட்விட்டர்) கணக்கை முடக்க வேண்டும் என்று கூறி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று ஒரே கட்டமாக 199 தொகுதிகளில் ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நடந்தது வருகின்றது. இது காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நடக்கும் ஒரு நேரடி தேர்தல் போராகவே கருதப்பட்டு வருகிறது. காலை ஏழு மணி முதல் மக்கள் ஆர்வமாக வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
மொத்தம் 200 தொகுதிகள் கொண்ட இந்த தேர்தலில், காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் இறந்த நிலையில் அந்த தொகுதியில் நடக்கவிருந்த தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீதமுள்ள 199 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடத்தி முடிக்கப்பட உள்ளது. மேலும் டிசம்பர் 3ம் தேதி இந்த தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தை முடக்குமாறு ராஜஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை தற்பொழுது எழுதியுள்ளது பாஜக. அந்த கடிதத்தில் "தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே பிரச்சாரங்கள் மற்றும் பிற தேர்தல் சார்ந்த விஷயங்களை அந்தந்த கட்சிகள் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்பது தான் தேர்தல் ஆணைய விதி".
"ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், இதை மீறி இன்று காலை வெளியிட்ட அவரது ட்விட்டர் பதிவில் ராஜஸ்தான் மாநிலத்தில் செய்யப்படவுள்ள நலத்திட்ட உதவிகள் குறித்து ஒரு பதிவை அவர் போட்டுள்ளார். மேலும் "மக்களுக்கு நன்மை பயக்கும் மற்றும் உத்தரவாதம் அளிக்கும் காங்கிரஸ் அரசை தேர்ந்தெடுங்கள்" என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
ஆகவே இது தேர்தல் விதி மீறல் என்று கூறி, உடனடியாக அவருடைய எக்ஸ் (ட்விட்டர்) தளத்தை முடக்க வேண்டும் என்றும் பாஜக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.