மறைந்த முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை அவரின் மகள் பன்சூரி நிறைவேற்றியுள்ளார்.

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய அதிகாரி குல்புஷன் ஜாதவ் வழக்கில் வாதாடி வென்றதால் தனக்கு ஒரு ரூபாய் ஊதியம் வழங்கினால் மட்டும் போதும் என்று மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே சுஷ்மா சுவராஜிடம் கூறி இருந்தார். சுஷ்மா சுவராஜ் இறப்பதற்கு சில மணிநேரத்துக்கு முன் தொலைபேசியில் பேசிய சால்வே வழக்கில் வென்றுவிட்டதால் ஒரு ரூபாய் ஊதியம் கிடைக்குமா என்று கேட்டிருந்தார்.

இதைக் கேட்ட சுஷ்மா சுவராஜ்தன்னிடம் ஒரு ரூபாய் ஊதியத்தை பெற்றுக்கொள்ளுமாறு ஹரிஸ் சால்வேயிடம் தெரிவித்திருந்தார். ஆனால், ஹரிஸ் சால்வேயுடனான பேசி முடித்த சில மணிநேரத்தில் சுஷ்மா மாரடைப்பால் காலமானார். 

சுஷ்மா சுவராஜ் கையால் கடைசிவரை ஒரு ரூபாயை வாங்க முடியாமல் போய்விட்டதாக குல்புஷந் வழக்கில் ஆஜராகிய வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே உருக்கமாகவும் பேசிவந்தார். " என்னை மறுநாள் மாலை 6 மணிக்கு வந்து விலை மதிக்க முடியாத அந்த பணத்தை பெற்றுக்கொள் என்று சுஷ்மா சுவராஜ் கூறியிருந்தார், ஆனால், தன்னால் பெற முடியவில்லை" என சால்வே ஆதங்கம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வழக்கறிஞர் ஹரிஸ் சால்வேயை நேற்று அழைத்த சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி அவரிடம் தனது தாயின் கடைசி ஆசையான ஒரு ரூபாய் ஊதியத்தை வழங்கினார்.

இதுகுறித்து ஹரிஸ் சால்வே நிருபர்களிடம் கூறுகையில், " குல்புஷன் யாதவ் வழக்கில் நான் வென்றுவிட்டால், எனக்கு விலைமதிக்க முடியாத வகையில் ஒரு ரூபாய் ஊதியம் தருவதாக சுஷ்மா தெரிவித்திருந்தார். நானும் நிச்சயமாக உங்களிடம் வந்து பெற்றுக்கொள்வேன் என்றேன். ஆனால், அவரிடம் பெறமுடியவில்லை, இப்போது அவரின் மகளிடம் பெறுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.