இந்த சம்பவங்கள் எங்களை மிக கடுமையாக பாதித்து இருப்பதால், சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்றும் யோசிக்க தூண்டுகிறது

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் முன்னாள் மேலாளர் திஷா சலியன் குடும்பத்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் மறைந்த தங்களின் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும், அவர் பெயரை அரசியல் நோக்கங்களுக்காக சிலர் பயன்படுத்தி வருகிறார்கள் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் மேற்கொண்டு வரும் செயல்களால் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அமைச்சர் நாராயன் ரானே மற்றும் அவரது மகன் நிதிஷ் ரானே இந்த சம்பவங்களுக்கு பின்னணியில் இருப்பதாக குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

குடியரசு தலைவருக்கு கடிதம்:

"எங்களின் மகள் பெயர் தவறாக சித்தரிக்கப்பட்டு வருவது பற்றி நாங்கள் (நான் மற்றும் என் மனைவி) இந்த நாட்டின் மிக முக்கிய நபர்களிடம் தகவல் தெரிவித்து இருக்கிறோம். இதே கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஸ்ரீ உத்தவ் தாக்கரே, எதிர்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவில், மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதியரசர் ஆகியோருக்கும் அனுப்பி வைத்து இருக்கிறோம்," என திஷாவின் தந்தை தெரிவித்தார்.

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் முன்னாள் மேலாளரான திஷா சலியன் 2020 ஜூன் மாத வாக்கில் இறந்த நிலையில் கிடந்தார். இவரை தொடர்ந்து ஜூன் 14, 2020 அன்று சுஷாந்த் சிங் ராஜ்புட் பத்ராவில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார். 

"சமூக வலைதளங்களில் செயல்பட்டு வரும் சிலர், தங்களின் மகள் உயிரிழந்த சில நாட்களில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் உயிரிழந்ததை அடுத்து என மகள் பற்றி தவறான கருத்துக்களை இணையம் மற்றும் செய்தி சேனல்களில் வெளியிட்டு வருகின்றனர். சில அரசியல்வாதிகளான நாராயன ரானே மற்றும் நிதிஷ் ரானே ஆகியோர் ஆதித்ய தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரேவுடனான பகையை காரணம் காட்டி இந்த விவகாரத்தில் நுழைகின்றனர். இருவரிடையேயான அரசியல் காரணங்களுக்காக எங்களை பயன்படுத்துகின்றனர்"

வெளியில் வர முடியாத நிலை:

"எங்களின் மகள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக நாராயன் ரானே மற்றும் நிதிஷ் ரானே தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை. எங்கள் மகள் திஷா ஜூஓன் 4 ஆம் தேதிக்கு பின் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. இதே விஷயத்தை அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளும் உறுதிப்படுத்திவிட்டன. இந்த நிலையில், இருவரின் கருத்துக்கள் எங்களை மன ரீதியில் மிகவும் பாதித்த உள்ளது. வெளியில் வர முடியாத நிலைக்கு தள்ளிவிட்டது" 

"எங்களால் அமைதியாக இருக்கவே முடியவில்லை. இவர்கள் கூறும் பொய் கருத்துக்கள் மற்றும் உண்மையற்ற தகவல்களால் நாங்கள் மிகவும் அவமானம் அடைகிறோம். மேலும் இவை எங்களது மகளின் நடத்தையை கெடுக்கும் வகையில் உள்ளது. இந்த சம்பவங்கள் எங்களை மிக கடுமையாக பாதித்து இருப்பதால், சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்றும் யோசிக்க தூண்டுகிறது" என கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முடிந்த வரை இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அதிகாரிகளை வலியுறுத்தி இருக்கின்றனர். இதற்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் வாழ்க்கை முடித்துக் கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்றும் திஷா பெற்றோர் தெரிவித்துள்ளனர்.