Survey of Rajinis political entrance

புத்தாண்டு பரபரப்புகளை விஞ்சி நிற்கிறது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த சேதி. சில சிறுகட்சி தலைவர்கள் ‘சூப்பர்ஸ்டார் கட்சி துவக்கியதும் எப்படியாவது இம்ப்ரஸ் செய்து அவரது கூட்டணியில் இடம்பிடிப்பேன்.’ என்று புத்தாண்டு சபதமே எடுத்திருப்பதாக கேள்வி. 
சூப்பரின் அரசியல் பிரவேசத்துக்கு வரவேற்பும், விமர்சனமும் ஒருசேர இருக்கும் நிலையில், இதற்கு முன் எந்த நடிகரெல்லாம் அரசியல் கட்சி துவக்கினார்கள், அவர்களில் தடம் பதித்தது யார், தடம் தெரியாமல் காணாமல் போனது யார், தனித்தன்மை இழந்தது யார்? என்பது பற்றிய ஸ்பீடு பதிவு இது...

சிவாஜி:
இந்தியாவில் சினிமா எனும் சொல் இருக்கும் வரை அழிக்க முடியாத பெயர் பெற்றவர். தமிழக முன்னேற்ற முன்னணி எனும் கட்சியை துவக்கினார். சாதிக்க முடியாமல் கலைத்தார். 
என்.டி.ஆர்:
ஆந்திர ஆளுமைதான். ஆனால் தமிழகத்திலும் பெரும் பேர் பெற்றவர். தெலுங்கு தேசம் கட்சியை துவக்கி முதல்வராகி ஏகபோகமாக வாழ்ந்தார். 
எம்.ஜி.ஆர்:
மாஸ் நடிகர்களுக்கு அரசியல் ஆசை வேறுன்ற காரணமாகும் மிக முக்கிய தலைவர். அவர் ஆரம்பித்த அ.தி.மு.க. ஆலமரமாகி இன்று வரை தமிழகத்தை ஆளுகிறது. 
விஜயகாந்த்:
”நுணல் மட்டுமல்ல அரசியல் தலைவனும் தன் வாயால் கெடுவார்” என்பதற்கான அக்மார்க் உதாரணம். குறுகிய காலத்தில் தமிழக சட்டசபையின் எதிர்கட்சி தலைவராக அமர்ந்து அசத்தியவர் அடுத்த தேர்தலில் பூஜ்யம் வாங்கி புஸ்வாணமாகி கிடக்கிறார். 
டி.ஆர்:
தி.மு.க.வின் மிகப்பெரிய பிரச்சார பீரங்கியாக இருந்தவர் பின் பகை கொண்டு வெளியேறினார். அமைப்புகள், கட்சிகள் என்னென்னவோ செய்து நயா பைசாவுக்கு பலனில்லை. 
சரத்குமார்:
அரசியலால் தன் சினிமா ஆளுமையை இழந்து கிடக்கும் மிக முக்கியமான பாடி பில்டர். சமத்துவ மக்கள் கட்சி எனும் ஒன்றை துவக்கி எந்த அதிர்வலையையும் ஏற்படுத்தாமல் ஒப்புக்கு அரசியலில் இருக்கிறார்...என்று கடும் விமர்சனம் உண்டு. 
கார்த்திக்:
இளம் ஹீரோக்கள் ரொமான்ஸ் காட்சிகளுக்கு பயிற்சி எடுக்க இவர் படத்ததைத்தான் போட்டுப் போட்டுப் பார்க்கிறார்கள். ஆனால் அரசியலில் காமெடியனானதுதான் இவரது அவல நேரம். நாடாளும் மக்கள் கட்சியை துவக்கிய கார்த்திக்கால் ஒரு பஞ்சாயத்தை கூட ஆள முடியவில்லை பாவம். 
சிரஞ்சீவி:
அக்கட தேசத்தில் என்.டி.ஆர். போல் அமோக அரசியல் செய்யலாம் எனும் கனவில் வந்து காணாமல் போனவர். மத்தியமைச்சராகி சீட்டை தேய்த்ததுதான் மிச்சம். 
பவன்கல்யாண்:
சிரஞ்சீவியின் நெருங்கிய உறவினர், தெலுங்கு பட உலகின் முக்கிய ஹீரோக்களில் ஒருவர். ஆட்சியை பிடிக்குமளவுக்கு இவரது அரசியல் இல்லாவிட்டாலும் ஒரு அழுத்தம் தரும் கெத்து இருக்கிறது.