புதுடெல்லி, அக்.19:-

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கை விசாரித்து வரும் 2ஜி சிறப்பு நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம்

ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனங்களுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை அமைப்புகள் தனித் தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை தாக்கல் செய்து உள்ள குற்றப் பத்திரிகையில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவருடைய சகோதரரும் சன் டி.வி.யின் நிர்வாக இயக்குநருமான கலாநிதி மாறன், அவருடைய மனைவி காவேரி மாறன், சவுத் ஏசியா எப்.எம். லிமிடெட்டின் (எஸ்.ஏ.எப்.எல்) மேலாண் இயக்குநர் கே.சண்முகம், எஸ்.ஏ.எப்.எல் மற்றும் சன் டைரக்ட் டி.வி. நிறுவனம் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

அதிகார வரம்பு பிரச்சினை

அதேபோன்று, சி.பி.ஐ. தரப்பில், மாறன் சகோதரர்கள், மலேசிய தொழில் அதிபர் ஆனந்த கிருஷ்ணன், அகஸ்டஸ் ரால்ப் மார்ஷல் மற்றும் சன் டைரக்ட் டி.வி., மேக்சிஸ் கம்யூனிகேஷன் பெர்கட், சவுத் ஏசியா என்டர்டெயின்மென்ட் ஹோல்டிங் லிமிடெட் மற்றும் ஆஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் ஆகிய 4 நிறுவனங்கள் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

இதனிடையே, மேற்கண்ட 2 வழக்குகளையும், 2-ஜி சிறப்பு நீதிமன்றம் விசாரிப்பதற்கு அதிகார வரம்பு இல்லை என்று கோரி மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

2-ஜி வரையறைக்குள்...

விசாரணையின்போது, மாறன் சகோதரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘ஏர்செல்-மேக்சிஸ் பிரச்சினையானது தனிப்பட்ட விவகாரம். குற்றம் சாட்டப்பட்டு உள்ள 2-ஜி ஊழல் விவகாரத்துடன் தொடர்பு உடையது அல்ல. எனவே, 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழலை விசாரிப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்ட நீதிமன்றம் இந்த விவகாரத்தை விசாரிக்க இயலாது’’ என்று குறிப்பிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி, ‘‘நியாயமாகவும், வெளிப்படையாகவும் பார்க்கையில் இந்த வழக்கு 2-ஜி வரையறைக்குள்தான் வருகிறது’’ என்று குறிப்பிட்டதுடன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மனு தாக்கல்

இந்த சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அதிகார வரம்பு பிரச்சினை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட தரப்பினர்களுள் ஒன்றான சவுத் ஏசியா எண்டர்டெயின்மென்ட் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனம் மனுக்கள் தாக்கல் செய்து இருந்தது.

நேற்று அந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர் மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

நடைமுறை உரிமை

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘சிறப்பு நீதிமன்றத்தில் எங்களுடைய வழக்கை விசாரிப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. 2-ஜி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தரப்பினர்கள் பட்டியலில் இந்த நிறுவனத்தின் பெயர் இல்லை.

2-ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் எந்தவொரு இடைக்கால உத்தரவுக்கு எதிரான மேல் முறையீடும் உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டு இருக்கிறது. இதனால், உச்ச நீதிமன்றத்தை அணுகும் நடைமுறை உரிமையை இந்த நிறுவனம் இழக்கக்கூடாது. எங்களுடைய நடைமுறை உரிமை கண்டிப்பாக பாதுகாப்பப்பட வேண்டும்’’ என்று வாதிட்டார்.

தள்ளுபடி

அதற்கு பதிலடியாக அரசுத் தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், ‘‘2-ஜி ஊழல் தொடர்பாக எழக்கூடிய அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த நீதிமன்றத்திலேயே ஏர்செல்-மேக்சில் ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கும் விசாரிக்கப்பட வேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.

இறுதியாக, 2-ஜி சிறப்பு நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.