Asianet News TamilAsianet News Tamil

ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது

Supreme Court Stays ASI Survey Of Gyanvapi Mosque Till July 26
Author
First Published Jul 24, 2023, 12:39 PM IST

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்குப் பக்கத்தில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் பழங்கால இந்துக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகக் கூறி, கடந்த மே மாதம் நான்கு பெண்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், “குறிப்பிட்ட இடத்தில் ஸ்வயம்பு ஜோதிர்லிங்கம் லட்சக்கணக்கான ஆண்டுகளாக இருந்ததாகவும், கி.பி. 1017 இல் முகமதி கஜினியின் தாக்குதலிலிருந்து தொடங்கி, சிலை வழிபாட்டாளர்கள் மீது வெறுப்பு கொண்டிருந்த முஸ்லிம் படையெடுப்பாளர்களால் அது சேதமடைந்தது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம், மசூதி இருக்கும் இடம், இதற்கு முன்பு கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க, ஞானவாபி மசூதி வளாகத்தில், இந்திய தொல்லியல் துறையின், அறிவியல்பூர்வ ஆய்வுக்கு அனுமதி அளித்தது. இதற்கு முன்னர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் எடுக்கப்பட்ட வீடியோ ஆய்வின்போது, மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்திற்கு சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட அந்த இடத்தை தவிர மற்ற இடங்களில் அறிவியல்பூர்வ ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

நாடாளுமன்றத்துக்கு பிரதமர் மோடி ஆப்சென்ட்: இரு அவைகளும் ஒத்தி வைப்பு!

அதன்படி, ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறையின், அறிவியல்பூர்வ ஆய்வு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது. இந்திய தொல்லியல் துறையின் 30 பேர் கொண்ட குழு இந்த  ஆய்வில் ஈடுபட்டனர். அதேசமயம், தொல்லியல் ஆய்வு முஸ்லிம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாக, ஞானவாபி மசூதி வளாகத்தில் தொல்லியல் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மசூதி கமிட்டி தரப்பில்  உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஞானவாபி மசூதி வழக்கின் இன்றைய விசாரணையின் போது, தொல்லியல் ஆய்வு குறித்த விசாரணையை அவசர முறையீடாக எடுத்து கொண்டு விசாரிக்க வேண்டும் என அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி (ஞானவாபி மசூதி கமிட்டி) சார்பில் முறையிடப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்டு, அதனை அவசர முறையீடாக விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வுக்கு வருகிற 26 ஆம் தேதி மாலை 5 மணி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. வாரணாசி மாவட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஞானவாபி மசூதி தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் அளிக்கும் வகையில், இந்த இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

அலகாபாத்உயர் நீதிமன்றத்தை நாளையே அணுகுமாறு மஸ்ஜித் கமிட்டியை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டதுடன், இடைக்கால உத்தரவு காலாவதியாவதற்கு முன்னர் விசாரணைக்கு அனுமதிக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது, மசூதி வளாகத்தில் எவ்வித ஆக்கிரமிப்பு பணிகளையும் இந்திய தொல்லியல் துறை மேற்கொள்ளக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios