குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

குஜராத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில், முதன்முறையாக நோட்டாவுக்கு வாக்களிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் அகமது படேல் போட்டியிடுகிறார். 

இதனிடையே, காங்கிரஸில் இருந்து அடுத்தடுத்து 7 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால், மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதன்காரணமாக மீதமுள்ள 44 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தக்க வைப்பதற்காக பெங்களூருக்கு அனுப்பப்பட்டனர். இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதை தடுக்கும் வகையில், மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கும் எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி அம்மாநில காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, நோட்டா முறையை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட முறையை இத்தனை ஆண்டுகள் கழித்து  காங்கிரஸ் கட்சி எதிர்ப்பது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் இது குறித்து பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.