ஹிஜாப் தொடர்பான கர்நாடக நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த வழக்கை அவசர விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஹிஜாப் தொடர்பான கர்நாடக நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த வழக்கை அவசர விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வருவதைக் கர்நாடக அரசு தடை செய்துள்ளதை அடுத்து, அங்கு மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் உள்ள அரசு பள்ளியில் அனுமதிக்கவில்லை. இந்த விவகாரம் கர்நாடகத்தில் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து, ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கில் ஹிஜாப், காவி துண்டு அணிந்து வருவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அவசியமான ஒன்றல்ல.

அரசு பள்ளிகளில் ஒரே சீருடை அணிந்து வர வேண்டும் என்ற கர்நாடகா மாநில அரசு பிறப்பித்திருந்த உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டனர். இதை அடுத்து ஹிஜாப் தொடர்பான கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதற்கிடையில், இந்த தீர்ப்புக்கு பின் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் வழக்கமான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சில மாணவிகள் பள்ளி,கல்லூரிகளுக்கு வருவதை புறக்கணித்தனர். மேலும், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின் பள்ளிகளில் நடைபெற்ற இறுதி செய்முறை பயிற்சி தேர்வுகளையும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சில மாணவிகள் எழுதவில்லை. இதனால், தேர்வில் பங்கேற்காத மாணவிகளுக்கு ஆப்சென்ட் போடப்பட்டுள்ளது. மேலும், இறுதி செய்முறை பயிற்சி தேர்வு எழுதாத மாணவ-மாணைவிகளுக்கு மறுதேர்வு எதுவும் நடத்தப்படாது என கர்நாடக பள்ளிகல்வித்துறை அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேவேளை வரும் 28ஆம் தேதி முதல் பள்ளிகளில் இறுதித்தேர்வுகளும் தொடங்க உள்ளன.

இந்த இறுதி தேர்வுகளையும் எழுதவில்லை என்றால் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்புக்கு செல்வதில் பெரும் சிக்கல் ஏற்படலாம். இந்நிலையில், மாணவ-மாணவிகளுக்கு வரும் 28 ஆம் தேதி தேர்வு தொடங்க உள்ளதால் ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்துள்ள மாணவிகளின் வழக்கறிஞர்களில் ஒருவரான கமத் உச்சநீதிமன்றத்தில் இன்று முறையீட்டார். ஆனால், ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினைக்கும் தேர்வுக்கும் சம்பந்தம் இல்லை. இந்த விவகாரத்தை உணர்வுப்பூர்வமானதாக்க வேண்டாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஹிஜாப் வழக்கு குறித்த விசாரணை தேதி ஹோலி பண்டிகை விடுமுறைக்கு பின் அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஹிஜாப் வழக்கை எப்போதில் இருந்து விசாரிப்பது என்பதை உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
