Supreme Court refuses interim stay on linking Aadhaar to bank account mobile nos

வங்கிக் கணக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை குறிப்பிட்டு வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் மற்றும் தொலைபேசி நிறுவனங்கள் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவகாசம்

அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகளை பெற ஆதார் எண் இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

ஆதார் எண் இணைப்பிற்கு அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆதார் கட்டாய நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

தனிநபர் அந்தரங்கம்

அது போலவே, தனிநபர் அந்தரங்கத்தை காப்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இதனால் ஆதார் எண்ணை இணைக்கும் மத்திய அரசின் உத்தரவு தனிநபர் உரிமைக்கு எதிரானது கூறியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மக்களிடம் பீதி

இந்நிலையில் ஆதார் எண் இணைக்கும் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் ஏ.கே சிக்ரி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.வி விஸ்வநாதன் கூறுகையில், ‘‘ஆதார் எண் இணைப்பதை கட்டாயமாக்கியதன் மூலம் வங்கிகளும், தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களும் மக்களிடம் பீதியை கிளப்புகின்றன'' எனக் கூறினார்.

இதை தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது-

கடைசி தேதியை குறிப்பிட்டு...

''வங்கிக் கணக்கு மற்றும் மொபைல் போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனக் கூறி எனக்கும் கூட குறுஞ்செய்திகள் வந்துள்ளன. இதை அனுப்பும் தொலைபேசி சேவை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசித் தேதியை அறிவிக்க வேண்டும்.

தொலைபேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு 2018 பிப்ரவரி 6-ம் தேதியும், வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு 2017 டிசம்பர் 31-ம் தேதியும் கடைசி தேதி என்பதை குறிப்பிட்டு வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்'' என அவர்கள் கூறினர்.

நீட்டிக்க கோரிக்கை

முன்னதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சியாம் திவான் கூறுகையில், ‘‘ஆதார் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நவம்பர் இறுதி வாரத்தில்தான் விசாரிக்கும் என்பதால், மத்திய அரசு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்'' என கூறினர்.

அப்போது அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறுகையில் ‘‘தற்போது போதுமான கால அவகாசம் உள்ளது. தேவைப்பட்டால் இது குறித்து பரிசீலிக்க தயார் என்று கூறினார்.

 ‘வங்கிக்கணக்கை மூடிவிடுவோம் என அச்சுறுத்துவதா?’

இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார், வாதிட்டபோது, ‘‘நீண்ட கால வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைக்கவில்லை என்பதற்காக மூடிவிடுவோம் என்று அரசு ஏன் அச்சுறுத்த வேண்டும்.?

நிதி முறைகேடுச் சட்டத்தின் கீழ் சாதாரண குடிமக்களை எப்படி தண்டிக்க முடியும்? நிதிமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆதாரை அரசு கட்டாயமாக்க முடியாது. இத்தகைய சமாச்சாரங்களை சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாது, எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருக்கிறது’’ என்று குறுக்குக் கேள்வி எழுப்பினார்.

இதனை பரிசீலிக்கக் கூடிய முக்கியமான கருத்துதான் என்று நீதிபதிகள் அங்கீகரித்து, வழக்கறிஞர் தத்தார் நவம்பர் இறுதி வரை காத்திருந்து அரசியல் சாசன அமர்வின் முன் வாதங்களை முன் வைக்கலாம் என்று தெரிவித்தனர்.

அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், அரசியல் சாசன அமர்வு இந்த ஆதார் விவகாரம் குறித்து இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பிக்காமல் இறுதித் தீர்ப்பை அளித்து முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.