டெல்லி அவசரச் சட்டத்துக்கு எதிரான அம்மாநில அரசின் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

 தலைநகர் டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடை மாற்றம் குறித்த அதிகாரம் துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசிடம் இருந்தது. டெல்லியில் ஆம் ஆத்மி அரசு ஆட்சியமைத்ததையடுத்து, அந்த அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என டெல்லி அரசு கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் ஆகியவற்றில் டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உத்தரவிட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த நிலையில், டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் பணியிட மாற்றம் உள்ளிட்ட பணிகளை நிர்வகிக்க குடிமைப் பணி ஆணையத்தை (என்சிசிஎஸ்ஏ) உருவாக்குவதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, இந்த ஆணையத்துக்கு டெல்லி முதல்வர் தலைமை தாங்குவார். ஆனால், டெல்லியின் நிர்வாகியாக துணைநிலை ஆளுநர் செயல்படுவார். குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாறுதல் விவகாரத்தில் அவருக்கே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது.

மணிப்பூரில் மாண்ட மனிதம்... மோடியின் மவுனத்தை நாடு மன்னிக்காது: கார்கே விமர்சனம்!

இந்த சட்டம் டெல்லி அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் இருப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நீர்த்துப் போகும் வகையில் இருப்பதாகவும் கூறி ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், டெல்லி அவசரச் சட்டத்துக்கு எதிரான அம்மாநில அரசின் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசியல் சாசனத்துக்க்கு இந்த வழக்கை மாற்றும் தனது விருப்பத்தை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை வெளிப்படுத்தியது. ஆனால், டெல்லி அரசு சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.