ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கல் எறிவதை தடுக்க முடியுமா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது..

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதி புர்ஹான் வானி பாதுகாப்பு படையினரால் சில மாதங்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைக்  அம்மாநிலத்தில் பிரிவினைவாதிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட முழு அடைப்பு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. 

சில நேரங்களில் அமைதி வழிப் போராட்டம் வன்முறையாகவும் வெடித்தது. கலவரக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர்.  போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பெல்லட் குண்டுகளை ராணுவம் பயன்படுத்தியதில் ஏராளமாோர் காயமடைந்தனர். சிலருக்கு கண்பார்வையும் பறிபோனது. 

இந்தச் சூழலில் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினர் பெல்லட் குண்டுகளை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இவ்வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. 

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறி்ஞர், காஷ்மீரில் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தவில்லை எனில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவது கடினம் என்று வாதிட்டார்.

மனுதாரர் தரப்பிலும் சில வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், காஷ்மீரில் போராட்டக்காரர்கள் கல் எறிவதை தடுக்க முடியும் என்று மனுதாரர் உறுதி தர முடியுமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.