கேரளாவில் பெய்துவரும் கனமழையால் அம்மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து, உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த அணையின் பராமரிப்புப் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருவதால், நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார்.

கேரள முதல்வரின் கடிதத்திற்கு தமிழக முதல்வர் பழனிசாமி பதில் கடிதம் எழுதினார். அதில், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. முல்லை பெரியாறு அணையில் 142 நீர் தேக்கப்படுவதால் அணையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கிடையாது. முல்லை பெரியாறு அணையிலிருந்து அதிகபட்ச நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் அளவு குறித்து தமிழக அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். முல்லைப் பெரியாறு அணைக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதில் எழுதினார். 

இதற்கிடையே, கேரளாவில் வெள்ளத்தால் நிலைமை மோசமடைந்துள்ளதால், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்கக்கோரி இடுக்கி பகுதியை சேர்ந்த ரசூல் ஜாய் என்பவர் தொடர்ந்த  வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று விசாரித்தது. 

அப்போது, அணையின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுப்பிய மனுதாரர் தரப்பை, ஆதாரங்கள் இல்லாமல் சந்தேகம் எழுப்பக்கூடாது என உச்சநீதிமன்றம் கண்டித்தது. அணை பாதுகாப்பாகவே உள்ளதாகவும் எந்த பயமும் இல்லை என தமிழக அரசு தரப்பில் கருத்து முன்வைக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைத்தால் கேரளாவில் நிலைமையை ஓரளவிற்கு சமாளிக்க முடியும் என கேரள அரசு சார்பில் வாதிடப்பட்டது. 

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 138 அடியாக குறைக்க முடியுமா? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது. மேலும் முல்லைப் பெரியாறு அணையின் நிலவரம், தண்ணீர் திறப்பு, இயற்கை பேரிடர் நடவடிக்கைகள் குறித்து இன்று விரிவான அறிக்கை தர துணைக் கண்காணிப்பு குழுவுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை பொதுமக்களின் நலன் கருதி குறைப்பது தொடர்பாக முல்லை பெரியாறு அணையின் துணை கண்காணிப்பு குழு, தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆகியவை ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கேரளாவின் கோரிக்கையை துணை கண்காணிப்பு குழு ஏற்று, முல்லை பெரியாறு நீர்மட்டத்தை குறைக்க பரிந்துரைத்தால், அதை ஏற்றுக்கொண்டு தமிழக அரசு நீர்மட்டத்தை 142 அடியிலிருந்து குறைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முல்லை பெரியாறு அணையின் துணை கண்காணிப்பு குழு, தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசித்து வருகின்றனர். எனினும் துணை கண்காணிப்பு குழுவின் ஆலோசனை முடிந்த பின்னர், அதன் பரிந்துரையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.