கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், சமூக தொற்றாக அது மாறாமல் தடுப்பதற்காக, ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் ஏழை, எளிய மக்களும் கூலி தொழிலாளர்களும் பிழைப்புக்காக சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய பெருநகரங்களுக்கு புலம்பெயர்ந்தவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

சமூக விலகலை உறுதி செய்வதற்காகத்தான் ஊரடங்கே அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த நோக்கத்தையே சிதைக்கும் விதமாக, உத்தர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு பிழைப்புக்காக வந்தவர்கள், கூட்டம் கூட்டமாக டெல்லியை விட்டு வெளியேறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

பீகார், ஜார்கண்ட், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வெளிமாநிலங்களில் வேலை செய்தவர்கள், ஊரடங்கை அடுத்து, கூட்டம் கூட்டமாக வெளியேறினார்கள். அதனால் சமூக விலகல், தனிமைப்படுதல் என்ற நோக்கமே சீரழிந்தது. 

விடுதிகள், வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பவர்கள் என யாரையும் அதன் ஓனர்கள் வெளியேற்றக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அனைத்து மாநில அரசுகளும், பிழைப்புக்காக வெளிமாநிலங்களிலிருந்து தங்கள் மாநிலத்திற்கு வந்தவர்களுக்கு தங்குமிடமும் உணவும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து அதை செயல்படுத்தியும் வருகின்றன. மாநில எல்லைகளை மூடுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. 

வெளிமாநிலத்தவர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித்தரப்படும் என்றும் யாரும் சொந்த ஊருக்கு செல்ல முயற்சிக்க வேண்டாம் என்றும் மத்திய, மாநில அரசுகள் அறிவுத்திவருகின்றன. 

இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளன என்பது குறித்து வழக்கறிஞர்கள் அலோக் ஸ்ரீவஸ்தவா, ராஷ்மி பான்சால் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே மற்றும் நீதிபதி நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. 

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜராகி வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, புலம்பெயரும் தொழிலாளர்களைத் தடுப்பது அவசியமானது. அவர்கள் நகர்வைத் தடுப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியும். இதற்கு மத்திய அரசு சார்பிலும் மாநில அரசு சார்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று வாதிட்டார்.

அதன்பின்னர் தலைமை நீதிபதி பாப்டே கூறுகையில், கொரோனா வைரஸை காட்டிலும் அதனால் தொழிலாளர்கள் இடம்பெயர்வதால் ஏற்படும் பதற்றமும் பயமும் அதிகமாக உள்ளது. இந்த விஷயத்தில் நீதிமன்றம் குழப்பத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் தொழிலாளர்களை தடுக்க மத்திய அரசு ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன் என்று கூறி இந்த வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்.