supreme court notice about cow vigilantes

பசு பாதுகாவலர்களுக்கு தடை விதிக்க தொடரப்பட்ட மனுவுக்கு 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ராஜஸ்தான் வன்முறை

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பசு வியாபாரி ஒருவர் பசுக்களை வளர்க்க வாகனத்தில் கொண்டு சென்றார். அப்போது, அந்த வாகனத்தை பசு பாதுகாப்பாளர்கள் என்ற பெயரில் ஒரு கும்பல் மறித்து, அந்த வியாபாரியை அடித்துக் கொன்றனர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மனுதாக்கல்

இந்நிலையில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் முன் சமூக ஆர்வலர்தேஹ்சீன் எஸ். பூனாவாலா என்பவர் தாக்கல் ெசய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது-

மோடி கண்டனம்

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சில குழுக்கள் பல்வேறு மாநிலங்களில் கடும் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பசுபாதுகாவலர்கள் குறித்து பிரதமர் மோடியே ஒரு முறை கண்டனம் தெரிவித்து, ‘சமூகத்தை அழித்து வருகிறார்கள்’ என்று தெரிவித்து இருந்தார். பசுபாதுகாவலர்களுக்கு எதிராக கடந்த ஆண்டு தொடரப்பட்ட மனுவை அக்டோபர் 21-ந்தேதிவிசாரணைக்கு உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

வன்முறை

பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், தலித் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பெரும் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த குழுக்களை நெறிப்படுத்த வேண்டியது அவசியம். சமூக ஒற்றுமை, பொது ஒழுக்கநெறி, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை காக்கவும், நலனில் அக்கறையும் கொள்ளவும் இந்த பசு பாதுகாவலர்களை நெறிப்படுத்துவது அவசியம்.

சமூக ஒற்றுமை குலைகிறது

நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இந்த பசு பாதுகாவலர்கள் வேகமாகப் பரவி வருகிறார்கள். இவர்கள் நாட்டில் பல்ேவறு மதம், சாதிகளுக்கு இடையே நிலவிவரும் சமூக ஒற்றுமையை குலைக்கும் வகையில் செயல்படுகிறார்கள்.

நீக்க வேண்டும்

குஜராத் மிருகவதைச் சட்டம்- 1954ல் பிரிவு 12, மஹாராஷ்டிரா மிருகவதைச் சட்டம்-1976ல் பிரிவு 13,கர்நாட பசுவதைக்கு எதிராக சட்டம் 1964ல், பிரிவு 15 ஆகியவை பசு பாதுகாவலர்களை பாதுகாப்பதாகவும், சாதகமான அமைந்துள்ளதால், அந்த பிரிவுகளை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். இதுபோன்ற வன்முறையில் ஈடுவோர் மீது எஸ்.சி. எஸ்.டி. பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மனுதாரர் தரப்பில் ஆதரவான வழக்கறிஞர் வாதிடுகையில், “ ராஜஸ்தானின் அல்வார் நகரில்பதுபாதுகாவலர்கள் வன்முறையில் ஈடுபட்டு ஒரு நபரை கொலை செய்தனர். இதுமட்டுமல்லாமல், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, குஜராத், ஜார்க்கண்ட், கர்நாடகா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் சூழல் மோசமாகி, இந்த பசுபாதுகாவலர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்’’ எனத் தெரிவித்தார்.

3 வாரம் அவகாசம்

இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம். கான்வில்கர், இந்த விவகாரம் தொடர்பாக, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, உத்தரப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்கள் அடுத்த 3 வாரத்தில் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, மே 3-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.