supreme court judges press meet four points

இன்று நாட்டில் முக்கிய நிகழ்வுகள் சில வரலாற்றில் இடம்பெற்றவையாக மாறிப் போயுள்ளன. அவற்றில் முக்கியமானது, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் செய்தியாளர் சந்திப்பு.

உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகியோர் செய்தியாளர்களை சந்திக்கப் போவதாகக் கூறி, அழைப்பு விடுத்த போதே, தில்லியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. என்ன காரணமாக இருக்கும் என்று செய்தியாளர்கள் குழம்பிப் போய்தான் இன்றைய செய்தியாளர் சந்திப்புக்கே வந்தார்கள். 

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை, ஜனநாயகம் இல்லை என அவர்கள் கூட்டாக பேட்டியளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். காரணம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இந்திய வரலாற்றிலே முதல் முறையாகும். 

இந்நிலையில், அந்தநீதிபதிகள் தங்கள் செய்தியாளர் சந்திப்பில் அப்படி என்னதான் சொன்னார்கள்?

தலைமை நீதிபதி மற்ற எந்த நீதிபதையை விடவும் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ அதிகாரம் படைத்தவர் அல்லர். 

எந்த வழக்கை யார் விசாரிக்க வேண்டும் என தீர்மானிக்கும் தலைமை நீதிபதிக்கு வழங்கப் பட்டுள்ள அதிகாரம், நீதிமன்றத்தின் சுமுகமான தங்கு தடையற்ற செயல்பாட்டுக்காகத்தானே தவிர, அது மற்ற நீதிபதிகள் மீது அதிகாரம் செலுத்துவதற்கான அங்கீகாரம் அல்ல... 

இப்படி எல்லாம் நீதிபதிகள் சொன்னாலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் சில, உயர் நீதிமன்றங்களின் சுதந்திரத்தை மோசமாகப் பாதித்துள்ளன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பாதை மாறிய நடவடிக்கைகள் ஏற்கெனவே நீதிமன்றத்தின் மாண்பை சற்றே சிதைத்துவிட்டது. 

முறையான காரணங்கள் ஏதும் இன்றி தாங்கள் விரும்பும் அமர்வுக்கு வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளால் அவை ஒதுக்கப் படுகின்றன என்று குற்றம்சாட்டப் படுகிறது. 

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் பேசி உள்ளார்.