supreme court judges issue continued

உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை, நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என்று மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகோய், மதன் லோகூர் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை பகிரங்கமாக குற்றம்சாட்டினர். இதன் காரணமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும் மூத்த நீதிபதிகளுக்கும் இடையிலான மோதல் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இந்தப் பிரச்னை தொடர்பாக இந்திய பார் கவுன்சில் நிர்வாகிகள் குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இருதரப்பையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து நேற்று, அதிருப்தி நீதிபதிகள் 4 பேரும் தலைமை நீதிபதியை சந்தித்து 15 நிமிடங்கள் பேசினர்.

நீதிபதிகள் இடையேயான பிரச்னை தீர்க்கப்பட்டதற்கு அடையாளமாக இன்று, பொது விருந்து நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மூத்த நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிருப்தி நீதிபதிகளில் 3 பேர் மட்டும் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். நீதிபதி செல்லமேஸ்வரர், நேற்று தலைமை நீதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்றார். இருப்பினும் இன்று நடந்த விருந்து நிகழ்ச்சியில் நீதிபதி செல்லமேஸ்வர் கலந்துகொள்ளவில்லை. இதன்மூலம் இந்த விவகாரத்தில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை என்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. 

அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலும், நீதிபதிகள் பிரச்னை இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரலாம் எனவும் தெரிவித்திருந்த நிலையில், இன்றைய விருந்தில் நீதிபதி செல்லமேஸ்வர் கலந்துகொள்ளாதது நீதிபதிகள் விவகாரம் முடிவுக்கு வராததை காட்டுவதாக அமைந்துள்ளது.