supreme court judgement husband wife relationship

மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவரை நீதிமன்றங்களால் கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. 

விமானியாகப் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த நபர் மீது அவரது மனைவி தரப்பில் வரதட்சணைக் கொடுமை புகார் அளிக்கப்பட்டது. 

இந்திய தண்டனையியல் சட்டத்தின்கீழ் வரதட்சணைக் கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் அந்த கணவரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கில், தான் பணியாற்றும் ஊர்களுக்கு அவர்களை அழைத்துச் செல்வதாகக் கூறி, அந்த நபர்(கணவர்) ஜாமீன் பெற்றுள்ளார். ஆனால், அதன்படி அவர் நடந்து கொள்ளவில்லை என்பதால் விசாரணை நீதிமன்றம் வழங்கிய முன் ஜாமீனை ஜாமீனை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி 3 மாதத்திற்குள் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கணவரின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆதர்ஷ் கோயல், யு.யு.லலித் அடங்கிய அமர்வு, மனைவியுடன் சேர்ந்து வாழும்படி, நீதிமன்றங்களால் கணவரை கட்டாயப்படுத்த முடியாது என தீர்ப்பளித்துள்ளது.

மனித உறவு தொடர்புடைய இந்த விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட்டு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. எனினும் இடைக்கால நிவாரணமாக விசாரணை நீதிமன்றத்தில் ரூ.10 லட்சத்தை மனுதாரர் (கணவர்) டெபாசிட் செய்ய வேண்டும். அந்தத் தொகையை அவரது மனைவி மற்றும் மகனின் அவசரத் தேவைக்காக எந்தவித முன் நிபந்தனையுமின்றி எடுத்துக்கொள்ளலாம் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

அப்போது கணவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ரூ.10 லட்சம் என்பது அதிகமான தொகையாகையால், அதைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

இதைக்கேட்ட நீதிபதிகள், இதுவொன்றும் குடும்ப நல நீதிமன்றம் கிடையாது; தொகை தொடர்பாக எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட மாட்டாது. ரூ.10 லட்சத்தை கட்டுவதற்கு சம்மதித்தால், வழக்கில் மீண்டும் ஜாமீன் அளிக்கப்படும் என்றனர்.

இதையடுத்து, மனுதாரர் தரப்பில் ரூ.10 லட்சத்தைக் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், சிறிது கால அவகாசம் கேட்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 4 வாரத்துக்குள் 10 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்ய மனுதாரர் ஒப்புக்கொண்டதால் அவரது உறுதியை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நீதிமன்றம் அளித்த ஜாமீனை உறுதி செய்வதாகவும் விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தி முடிக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.