ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற மத்திய அரசின் முடிவு சரியே என்றும் அது சட்டப்படி செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற மத்திய அரசின் முடிவு சரியே என்றும் அது சட்டப்படி செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டம் என்பது இந்திய இராணுவத்தில் சேவை புரிந்து ஓய்வு பெறுபவர்களின் ஓய்வூதியத்தின் அடிப்படையாக, அவர்கள் ஓய்வு பெற்ற தேதியை கருத்தில் கொள்ளாமல், அவர்களது பதவி மற்றும் அப்பதவியில் அவர்கள் சேவை செய்த காலம் ஆகியவற்றை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் கணக்கிடப்படும் ஒன்று. அதன்படி, கடந்த 1973 ஆம் ஆண்டு வரை இந்த கொள்கையை பின் பற்றி இந்திய இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இதனிடையே மத்திய அரசு கடந்த 2015 ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி அறிமுகப்படுத்திய, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இந்த ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டம் ஒரே பதவியில் பணி ஓய்வு பெறும் ராணுவ வீரர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியத்தை நோக்கமாக கொண்டது.

மத்திய அரசின் இந்த திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்த நிலையில் மத்திய அரசின் முடிவு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணையின் போது, திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையில் அரசியலமைப்பு குறைபாடு எதுவும் இல்லை என்று நீதிமன்றம் கூறியது. அதே பதவியில் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு ஒரே ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று எந்த சட்டப்பூர்வ உத்தரவும் இல்லை. ஒரே பதவியை மட்டுமே ஒரே ஓய்வூதியத்திற்கான அளவு கோளாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், சேவை காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. இப்போது நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கிற்கு தீர்ப்பு அளிக்கையில், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற மத்திய அரசின் முடிவு சரியே. மத்திய அரசின் கொள்கையில் அரசியலமைப்பு ரீதியாக எந்த குறைபாடும் இல்லை.

மத்திய அரசு ஒரு கொள்கை முடிவை எடுத்துள்ளது. அத்தகைய முடிவு அரசாங்கத்தின் கொள்கை வகுப்பதற்கான அதிகார வரம்பிற்குள் உள்ளது. ஐந்தாண்டுகள் முடிவடைந்த பின்னரும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய திட்டத்தின் நிலுவையில் உள்ள மறுசீரமைப்பு பணியை ஜூலை 1, 2019 முதல் மேற்கொள்ள வேண்டும். இப்போது பகத் சிங் கோஷ்யாரி கமிட்டியின் பரிந்துரையின்படி, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை காலமுறை மறுஆய்வு என்ற தற்போதைய கொள்கைக்குப் பதிலாக, தானியங்கி வருடாந்திர திருத்தத்துடன் ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை அமல்படுத்தக் கோரி இந்திய முன்னாள் படைவீரர் இயக்கம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தது.