ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். மேலும் இந்த வழக்கில் நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களை விடுவிக்க மத்திய அரசு மறுத்து வந்த நிலையில் அவர்கள் பரோலில் அவ்வப்போது வெளியே வந்து சென்றனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது. இந்த பரோல் 9 மாதங்களை கடந்து தொடர்ந்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி தமிழக அரசு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது.

அதை தொடர்ந்து அவருக்கு பரோல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பரோலுக்கு சில கட்டுப்பாடுகள் இருப்பதால், சுதந்திரமாக வெளியே செல்ல முடியவில்லை என்றும் தனக்கு ஜாமின் வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார். முன்னதாக பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தம் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் தம்மை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

இந்த விசாரணையின் போது, 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவை தீர்மானம் மீது ஆளுநர் தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருப்பதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. மேலும் பேரறிவாளன் மனுவுக்கும் ஆளுநர் கருத்துக்கும் எந்த தொடர்பு இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இவ்விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க காலதாமதம் ஆவதால் பரோலில் இருக்கும் பேரறிவாளன், சுதந்திரமாக வெளியே செல்ல முடியவில்லை எனவும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரும் பேரறிவாளன் மனு மீதான விசாரணை நடைபெறறது. அப்போது, ராஜூவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் 32 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
