கொரோனா ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டது புலம்பெயர் தொழிலாளர்கள் தான். பிழைப்புக்காக வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மார்ச் 25ல் ஊரடங்கு தொடங்கியதிலிருந்து சுமார் ஒன்றரை மாதமாக வேலையும் வருமானமும் இல்லாமல் தவித்துவந்தனர். 

ஊரடங்கு அமலில் இருந்ததால் அவர்களால் சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல் தவித்துவந்தனர். குடும்பங்களை சொந்த ஊரில் விட்டுவிட்டு பிழைப்புக்காக புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள், வருமானமும் இல்லாமல், குடும்பத்திற்கு பணம் அனுப்ப முடியாமல், குடும்பத்தை பார்க்கவும் முடியாமல் தவித்துவந்தனர். 

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிடம் அளிக்க அந்தந்த மாநில அரசுகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும், அனைவருக்கும் அந்த உதவி போய் சேரவில்லை. அதுமட்டுமல்லாமல் பல புலம்பெயர் தொழிலாளர்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திணறினர். மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தபிறகு, சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளின் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுவருகின்றனர்.  இதற்கிடையே, பல மைல் கடந்து தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்ல முடிவெடுத்து நடந்து சென்றவர்கள் சிலர் ரயில் விபத்தில் உயிரிழந்த சம்பவமும் அரங்கேறியது.

கொரோனா ஊரடங்கால் கடும் இன்னல்களை சந்தித்தது புலம்பெயர் தொழிலாளர்கள் தான். சொந்த ஊரையும் குடும்பத்தினரையும் உறவினர்களையும் பிரிந்து, வருமானம் இல்லாததால் பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினார்கள். ஆனால் இப்போது புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திருப்பியனுப்பப்படுகின்றனர். 

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தை கையில் எடுத்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மத்திய பாஜக அரசை விமர்சித்து அரசியல் செய்துவருகிறது. 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரிக்கும் உச்சநீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் தோல்வியடைந்து விட்டதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளது. 

”புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உணவு, தங்குமிடம் ஆகிய வசதிகளை ஏற்படுத்தி தருவதில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் 2 மாதங்களுக்கும் மேலாக சொந்த ஊர்களுக்கு நடந்து செல்கிறார்கள். விபத்துகளில் அவர்கள் இறக்கும் அவலங்களும் அரங்கேறியுள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வியடைந்துள்ளன. 

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான போக்குவரத்து, உணவு, தங்குமிடம் ஆகிய வசதிகளை இலவசமாக ஏற்படுத்தித்தர மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்னவென்ற விளக்கமான அறிக்கையை மே 28ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.