supreme court condemns to central government on lokpal
லோக்பால் சட்டத்தை அமல்படுத்தாமல் மத்திய அரசு தாமதம் செய்வது நியாமானது அல்ல,அச்சட்டத்தை உடனடியாக அமலுக்கு கொண்டுவர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காமன் காஸ் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் நவீன் சின்ஹா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தொண்டு நிறுவனத்தின் சார்பில் பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஆஜராகி வாதாடினார்.
2013 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு அடுத்த ஆண்டே அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட லோக்பால் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் , லோக்பால் சட்டத்தை அமல்படுத்தாமல் மத்திய அரசு தாமதம் செய்வது நியாமானது அல்ல ,அச்சட்டத்தை உடனடியாக அமலுக்கு கொண்டுவர வேண்டும் என உத்தரவிட்டனர்.
லோக்பால் தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களை உடனடியாக நியமிக்கவேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர்
லோக் பால் சட்டத்தின்படி லோக்பால் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்வுக் குழுவில் எதிர்க்கட்சி தலைவர் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் தற்போது நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமான எதிர்க்கட்சித் தலைவர் இல்லை.
நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமான எதிர்க்கட்சி தலைவரை நியமிக்க எதிர்க்கட்சி குறைந்தபட்சம் 10 சதவீதம் இடங்களைப் பெற்றிருக்கவேண்டும். நடப்பு நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 545 உறுப்பினர்களில் காங்கிரஸ் கட்சிக்கு 45 உறுப்பினர்களே உள்ளனர். இது 10 சதவீத இடங்களுக்கும் குறைவானதாகும்.
இந்த வழக்கு வி்சாரணையின்போது, எதிர்க்கட்சி தலைவர் இல்லை என்ற மத்திய அரசின் வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. அவசியம் ஏற்படும்பட்சத்தில் எந்தக் கட்சி அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ளதோ அந்தக் கட்சியின் தலைவரை எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிப்பதற்கான சட்டத் திருத்தத்தை செய்து, உடனடியாக லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வுசெய்யவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
