ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து பி.எஸ். 3 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள், வாகனங்கள் விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. 

இதையடுத்து, ஸ்டாக்கில் உள்ள பைக், ஸ்கூட்டர்களை விரைவாக விற்பனை செய்யும் நோக்கில் ஹீரோ மோட்டார் கார்பரேஷன், ஹோண்டா மோட்டார் சைக்கில் அன்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அதிகபட்சமாக ரூ. 12,500 வரை தள்ளுபடி அறிவித்துள்ளன.

தடைவிதிப்பில் சிக்கியுள்ள பி.எஸ்.3 தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 8 லட்சம் வாகனங்களில் 6.71 லட்சம் இருசக்கர வாகனங்களாகும்.

இப்போதுள்ள நிலையில், கிடப்பில் உள்ள ஸ்டாக்குகளை விற்பனை செய்ய வேண்டும் என்பதால், இதுவரை இல்லாத விலைக்குறைப்பில் டீலர்களுக்கு நிறுவனங்கள் வாகனங்களை விற்பனை செய்துவருகின்றன.  

இதில் அதிகபட்சமாக ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.12,500 வரை விலையில் தள்ளுபடி அளிக்கிறது. இதுகுறித்து டீலர்கள் கூறுகையில், “ நிறுவனங்கள் எங்களுக்கு ஸ்கூட்டர்கள் மீது ரூ. 12500 தள்ளுபடி அளிக்கின்றன. இதில் பைக்குகளுக்கு ரூ.7500 வரையிலும், புதிய ரக மோட்டார் சைக்கில்களுக்கு ரூ. 5000 வரையிலும் தள்ளுபடி அளிக்கப்படுகிறது” என்றனர்.  

ஆனால், ஹோண்டா மோட்டார் அன்ட் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் தங்களின் ஸ்கூட்டர்கள் மீது ரூ.10 ஆயிரம் தள்ளுபடி அளிக்கிறது. ஆனால், இந்த தள்ளுபடி அனைத்தும் நாளை ஒருநாள் மட்டுமே ஆகும்.

ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பின் சர்வதேச விவகாரங்கள் தலைவர் நிகுஞ் சாங்கி கூறுகையில் “ இரு சக்கர வாகனங்கள் விற்பனை வரலாற்றில் இதுபோல் எப்போதும் தள்ளுபடி அளித்தது இல்லை.

உச்சநீதிமன்ளம் பி.எஸ்.3 தயாரிப்புகளுக்கு தடை விதித்து இருப்பதால், இப்போது எங்கள் நோக்கம் முழுவதும் தேங்கிக்கிடக்கும் வாகனங்களை நாளை ஒருநாள் அதாவது ஏப்ரல்1-ந்தேதிக்குள் விற்பனை செய்ய வேண்டும்என்பது தான்.

தகுதியான வாடிக்கையாளர்களை போனில் அழைத்து நாங்கள் விலைக்குறைப்பைக் கூறி விற்பனை செய்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.