அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மற்றும் சட்டவிரோத கைது ஆகிய இரு மனுக்களின் மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனால், செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை 3ஆவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த 3ஆவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது. அவரை நீதிமன்ற காவலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டப்படியானது என உத்தரவிட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதேபோல், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என கோரி அமலாக்கத்துறை சார்பிலும் கேவியட் மனுத்தாக்கல் செய்திருந்தது.
2024 தேர்தல்: தமிழ்நாட்டில் கூட்டணி கணக்கு என்ன?
இந்த வழக்குகள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போது, செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
இந்த நிலையில், இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
முன்னதாக, செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை எப்போதில் இருந்து காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்பது குறித்து முடிவெடுக்கும் வழக்கானது, அந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வான நீதிபதி நிஷாபானு, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் அனைத்து அம்சங்கள் குறித்தும் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கும். எனவே, இந்த வழக்கை இங்கு நிலுவையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
இந்த பின்னணியில் உச்ச நீதிமன்றத்திலும் இரு தரப்பு வாதங்கள் முடிவுற்று தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
