செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தமிழக மின்சாரத்தறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு குறித்த மேல் முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ண முராரி, வி.சுப்ரமணியன் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு விசாரணையின்போது, சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி முதலியோருக்கு சம்மன் அனுப்பியதை ரத்து செய்து உத்தரவிட்டதை ஏற்க முடியாது என அமலாக்கத்துறை வாதிட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது,கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரானார். செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனை எதிர்த்து அவர் வாதிட்டார்.
பின்னர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜரானார். சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் 50, 63 ஆவது பிரிவுகளை எதிர்த்து ரிட் மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கும், அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கில் அந்த ரிட் மனுவுக்கு எவ்விதமான தொடர்பும் இல்லை என்றும் விசாரணைக்கு முட்டுக்கட்டை போடவே இதுபோன்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்ற என்று குறிப்பிட்டார். அனைத்து வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.