பேரணி, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் பொதுச் சொத்துக்களை அடித்து கட்சித் தொண்டர்கள் நாசம் செய்தாலோ அல்லது உயிரிழப்புகள் நேர்ந்தாலோ, அந்த கட்சியின் தலைவரே பொறுப்பேற்று இழப்பீட்டுத் தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும் இல்லாவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஓய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கலாச்சார நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் தொண்டர்களை ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் தூண்டிவிட்டு, பொதுச்சொத்துக்களை சேதம் செய்ய தூண்டிவிட்டாலோ, ஊக்கப்படுத்தினாலோ, தொடங்கினாலோ அது கிரிமினல் நடவடிக்கைக்கு உட்பட்டதாகும். 

இதுபோன்ற ஆர்ப்பாட்டத்தில் சேதமடையும் பொதுச் சொத்துக்களுக்கான இழப்பீட்டை வரிசெலுத்தும் மக்களிடம் இருந்து அரசு வாங்கக்கூடாது. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவத்த அரசியல் கட்சியின் தொண்டர்களும், அதன் தலைவர்களுமே பொறுப்பு. இதுபோன்ற வன்முறையில் ஈடுபடும் ஒவ்வொரு மீதும் ஐபிசி பிரிவு 153ஏ, 295ஏ, 298, 495 ஆகியபிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யலாம். 

இந்த வன்முறை சமூக ஊடகங்கள் மூலம் தூண்டப்பட்டாலோ, அல்லது செய்தித்தொடர்பாளர் பேசி அதன் மூலம் ஏற்பட்டாலோ அல்லது தனிநபர் பேச்சுமூலம் நடந்தாலோ அவர்களே பொறப்பு ஏற்க வேண்டும். இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுவோரை சம்பவ இடத்திலேயே கைது செய்ய வேண்டும். அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த வழக்கு தொடர்பாக போலீஸில் விசாரணைக்கு ஆஜராகத் தவறினால் அவர் மீது கிரிமினல் வழக்கும், தலைமறைவானர் என்றும் அறிவிக்கலாம் என உத்தரவிட்டனர்.