பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் இருப்பதால், அவரின் மேலவை உறுப்பினர் பதவியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.எல். சர்மா, இந்தமனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, நீதிபதி தீபக் மிஸ்ரா, அமித்தவா ராய் மற்றும் ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அமர்வு இதை விசாரணைக்கு ஏற்பதாகவும், வழக்குகளின் வழக்கமான பட்டியலில் வரும் போது விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது.  மனுதாரர் தரப்பில் மனுவில் கூறியிருப்பதாவது-

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமாருக்கு எதிராக கிரிமினல் வழக்கு நிலுவையில் இருக்கிறது. கடந்த 1991ம் ஆண்டு பார் தொகுதியில் நடந்த மக்களவைத் தேர்தலின்போது, நடந்த வன்முறையில் உள்ளூர் காங்கிரஸ் தலைவர் சீதாராம் சிங் கொல்லப்பட்டால், 4 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக நிதிஷ்குமார் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. ஆதலால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கு குறித்தும், நிதிஷ் குமார் மீதான கிரிமினல் குற்றச்சாட்டு குறித்தும், தேர்தல் ஆணையம் நன்கு அறிந்திருந்தும், அவரின் சட்ட மேலவை உறுப்பினர் பதவியை ரத்து செய்ய வில்லை. இதனால், நிதிஷ் குமார் தொடர்ந்து மேலவை உறுப்பினர்  பதவியை இப்போது வரை அனுபவித்து வருகிறார்.

கடந்த 2002ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வேட்புமனுத் தாக்கலின்போது, வேட்பாளர் அனைவரும் தங்களுக்கு எதிரான கிரிமினல் குற்றச்சாட்டு குறித்த அறிக்கையை மனுத்தாக்கலின் போது இணைக் வேண்டும். ஆனால், நிதிஷ் குமார் கடந்த 2004ம் ஆண்டில் இருந்து தன் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்து ஏதும்குறிப்பிடவில்லை. அந்த வகையில், நிதிஷ் குமாரின் பதவியை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.