supreme corut judges complaint for Supreme Court Chief Justice

உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது, நீதித்துறையை பாதுகாக்க தவறினால், நாட்டில் ஜனநாயகம் நீடிக்காது. தலைமை நீதிபதி தீபஸ் மிஸ்ரா பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறார் என்று உச்ச நீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் நேற்று பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

நீதிபதிகள் ஜஸ்தி செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோக்கூர், குரியன் ஜோசன் ஆகியோர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

வரலாற்றில் முதல்முறை

நீதித்துறையின் வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, முதல் முறையாக தலைமை நீதிபதி மீது நீதிபதிகள் குற்றச்சாட்டு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீதிபதிகள் பேட்டி

டெல்லியில் துக்ளக் சாலையில் உள்ள நீதிபதி செலமேஸ்வர் இல்லத்தில் நேற்று நீதிபதிகள் செலமேஸ்வர்,ரஞ்சன் கோகாய், மதன் லோக்கூர், குரியன் ஜோசப் ஆகியோர் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது-

நிர்வாகச் சீர்கேடு

உச்ச நீதிமன்ற நிர்வாகம் எதுவுமே சரியில்லை, கவலையளிக்கும் விதத்தில் இருக்கிறது. நீதித்துறை நிர்வாகத்தில் நடக்கும் குளறுபடிகள், சீர்கேடுகள், எங்களின் கவலைகள் குறித்து தலைமை நீதிபதி தீபஸ்மிஸ்ராவிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதினோம். ஆனால், எங்கள் கவலைகளையும், கருத்துக்களையும் அவர் புறந்தள்ளிவிட்டார்.

ஜனநாயகம் நீடிக்காது

ஆதலால், எப்போதும் இல்லாத நிகழ்வாக, வேறு வழி இல்லாமல், நாட்டு மக்களுக்கு இது குறித்து சொல்ல முன்வந்துள்ளோம். நீதித்துறை பாதுகாக்கப்படாவிட்டால், நாட்டில் ஜனநாயகம் நீடித்து இருக்காது. நீதித்துறையில் நடக்கும் குளறுபடிகள் குறித்து தலைமை நீதிபதிக்கு எடுத்துக் கூறியபோதும் அவர் அதை நம்பவில்லை.

விரும்பத்தகாத நிகழ்வுகள்

எங்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்துவிட்டது. நீதித்துறையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கின்றன. இது தொடர்பாக இன்று (நேற்று)காலைகூட அவரை சந்திக்க முயற்சித்தோம். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. என்று 2-வது மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் கவலை தெரிவித்தார்.

மக்களிடம் பேசுகிறோம்

நாங்கள் தலைமை நீதிபதி தீபஸ் மிஸ்ராவை ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காக சென்று சந்தித்தோம். ஆனால், அந்த விஷயத்தில் அவரை எங்களால் சமாதானம் செய்யவும், சம்மதிக்க வைக்க இப்போதுவரைமுடியவில்லை. ஆதலால்,வேறு வழியின்றி நாட்டு மக்களிடம் பேச கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தயவு செய்து நீதித்துறையை பாதுகாக்க வேண்டும் என்றனர்.

பதவி நீக்கவேண்டுமா?

தலைமை நீதிபதி தீபஸ் மிஸ்ரா பதவிநீக்கம் செய்யப்பட வேண்டுமா? என நிருபர்கள் கேட்டபோது, நீதிபதிசெலமேஸ்வர் கூறுகையில், “ அதை நாடுதான் தீர்மானிக்க வேண்டும், கடந்த 2 மாதங்களுக்கு முன் நாங்கள் 4 பேரும் கையொப்பம் இட்ட ஒரு கடிதத்தை தலைமை நீதிபதிக்கு அனுப்பினோம்.

நம்பகத்தன்மையில் கேள்வி

ஒரு குறிப்பிட்ட ஒரு விஷயத்தை குறிப்பிட்ட நெறிமுறையின் அடிப்படையில் செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், அந்த விஷயம் வேறு விதத்தில் நடந்தபோதுதான் இந்த நீதித்துறையின் நம்பகத்தன்மை குறித்து மேலும் கேள்விகள் எழுந்தன.

20 ஆண்டுகளுக்குபின்

 நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோக்கூர், குரியன் ஜோசப் ஆகியோர் ஆன்மாவை விற்றுவிட்டு பணியாற்றினார்கள் என்று 20 ஆண்டுகளுக்கு பின் யாரும் எங்கள் மீது குற்றம்சாட்டிவிடக்கூடாது. அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு நியாயமாக நடந்து கொள்ளவில்லை என யாரும் கூறிவிடக்கூடாது என்பதற்காகவே இப்போது நாங்கள் பேசுகிறோம் என்றார்.

நீதிபதி மர்ம மரணம்

குறிப்பிட்ட கடிதம் குறித்து என் கூறினீர்களே அது சி.பி.ஐ. நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்ததா என நிருபர்கள் கேட்டபோது, அதற்கு நீதிபதி ரஞ்சன் கோகாய், “ ஆம், அது குறித்துதான் தெரிவித்தோம்’’ என்றார்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.