நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடர் நிறைவடைந்ததை அடுத்து இரு அவைகளும் காலவரை குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

19 அமர்வுகள் நடைபெற்ற இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வங்கி திருத்த மசோதா உட்பட 14 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போதுதான் நாட்டின் புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்தும் துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த கூட்டத்தொடரில் பசு பாதுகாவலர்களால் பலர் அடித்துக்கொல்லப்பட்ட பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை , காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் மீது கல்வீச்சு சம்பவம் உள்ளிட்ட பிரச்சினைகளில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் 75-வது ஆண்டு நிறைவுதினத்தை ஒட்டி மக்களவையில் சிறப்பு விவாதம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தொடரில் மக்களவையில் உறுப்பினர்கள் கேட்ட 63 கேள்விகளுக்கு நேரடியாக அமைச்சர்கள் பதில் அளித்தனர். உறுப்பினர்களின் 4,370 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமான பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து 5 நாட்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

மக்களவையைப் போல் மாநிலங்களவையும் நேற்று மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.