தற்கொலை செய்வதை குற்றமற்றதாக்குவது மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருத்துவ வசதி வழங்கும் உரிமை மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

மசோதா தாக்கல்

மனநலம் மற்றும் சுகாதார மசோதா என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 134 திருத்தங்களுடன் நிறைவேறியது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா பலவல்லுநர்களின் ஆய்வுகள், ஆலோசனைகளுக்கு பின், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு கோரி, இந்த மசோதாவை ஜே.பி. நட்டா தாக்கல் செய்தார்.

சிகிச்சைக்கு உரிமை

அப்போது அவர் பேசுகையில், “ இந்த மசோதா மனநிலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க வழிவகை செய்கிறது. எந்தவிதமான பாகுபாடு காட்டியும் பாதிக்கப்பட்ட நபருக்கு  மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறக்கூடாது.

இந்த மசோதாவின் நோக்கம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சையையும், அவர்களின் உரிமையை நிலைநாட்டுவது தான்.

குற்றமாகாது

அதுமட்டுமல்லால், ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன்  அதற்கு முயற்சி அது தோல்வி அடையும் போது, அவர் மீது வழக்கு தொடரப்படும்.

ஆனால், தற்கொலை செய்ய முடிவு எடுக்கும் நபர் பெரிய மன உளைச்சலில் இருந்துதான் இந்த முடிவுக்கு செல்கிறார்கள். மேலும், பெண்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் வகை செய்கிறது.

ஐ.நா. புள்ளி விவரப்படி இந்தியாவில் 6 முதல் 7 சதவீத மக்கள் சில மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் 2 சதவீதம் பேர் குறிப்பிட்ட மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

ஆதரவு

இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருமான சசி தரூர்  பேசினார். அப்போது அவர் பேசுகையில், “ மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே பி நட்டா கொண்டு வந்துள்ள மனநல கவனிப்பு எனும் இம்மசோதாவை வரவேற்கிறேன்.

நான் மனநல நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் வாழ்ந்த அனுபவமுள்ளவன். பல வருடங்களாக மன நல பாதிப்பினை இந்திய சமுதாயம் ஏற்கவோ, சாதகமாகவோ கருதவோ செய்யவில்லை. நான் தற்கொலையை குற்றமற்றதாக்கும் மசோதாவை வரவேற்கிறேன்

 போலீசாரும் ஊடகங்களும் மனநல அழுத்தங்களை கையாள்வதில் உணர்வுபூர்வமாக செயல்பட வேண்டும். கல்வி நிலையங்கள் வல்லுநர்களை கொண்டு மன அழுத்தத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஆலோசனை பெறுவதற்கு உதவி செய்ய வேண்டும்’’ என்றார்.