இந்திய ரூபாய் நோட்டுகளில் லட்சுமியின் படத்தை அச்சிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கோரிகை விடுத்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் உள்ள காண்ட்வா மாவட்டத்தில் 'சுவாமி விவேகானந்தர்' சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “இந்தோனேசியாவில் உள்ள கரன்சியில் விநாயகர் படம் அச்சிடப்பட்டுள்ளது. விநாயகர் தடைகளை நீக்குபவர். அதனாலேயே இந்தோனேசியா கரன்சியில் விநாயகரை அச்சிட்டுள்ளனர். இதை நாமும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய ரூபாய் நோட்டுகளில் லட்சுமியின் படத்தை அச்சிட வேண்டும். இதற்கு  நான் ஆதரவு தெரிவிக்கிறேன். இதுபற்றி பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தில் (சிஏஏ) ஆட்சேபனைக்குரிய அம்சங்கள் எதுவுமில்லை. காங்கிரஸாரும் கட்சியும் மகாத்மா காந்தியுமே சிஏஏ-வை கோரினர்.  2003-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் மன்மோகன் சிங் பேசும்போது இதை நிறைவேற்ற வலியுறுத்தினார். அதைத்தான் இப்போது நாங்கள் செய்துள்ளோம். பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு பாஜக அநீதி இழைத்துள்ளது என்று இப்போது அவர்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள். இதில் என்ன அநீதி இழைக்கப்பட்டது?” என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.