பாஜக மூத்த தலைவரும் நியமன எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது:
தற்போது உலகளவில் இந்தியா பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இருந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாகப் பேசிவருகிறார். ஆனால், அது உண்மையில்லை. இந்தியாவின்  பொருளதாரம் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தப்படியாக 3-வது இடத்தில் உள்ளது. ஆனால், பிரதமர் மோடி 5-வது இடத்தில் இந்தியா இருக்கிறது என்று ஏன் சொல்கிறார் என எனக்குப் புரியவில்லை. பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் தெரியாததே அதற்குக் காரணம்.
மோடிக்கு மட்டுல்ல; நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கும் பொருளாதாரம் பற்றி தெரியவில்லை. அன்னிய செலவானி மதிப்பை வைத்து மட்டும் நாட்டின் பொருளாதாரம் 5-வது இடத்தில் உள்ளதாக இருவரும் பேசுகிறார்கள். ஆனால், அந்த மதிப்பு நிலையானதல்ல. தொடர்ந்து மாறக் கூடியதே. அதை மனதில் வைத்து பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவது மிகவும் தவறு. தற்போதைய நிலையில் அந்த விகிதத்தை அடிப்படையாக வைத்து கணக்கிட்டால்  இந்தியாவின் பொருளாதாரம் 7-வது இடத்தில் இருக்கிறது. 5-வது இடத்தில் அல்ல.
உண்மையில் பொதுமக்களின் வாங்கும் திறனை அடிப்படையாக வைத்தே ஒரு நாட்டின் பொருளதாரம் நிர்ணயிக்கப்பட்ட வேண்டும். அந்த வகையில் கணக்கிட்டால், இந்திய பொருளாதாரம் தற்போது உலக அளவில் 3-வது இடத்தில் உள்ளது. இவ்வாறு சுப்பிரமணியன் சாமி பேசினார்.