ஹிஜாப் வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் தேர்வை புறக்கணித்து வீட்டிற்கு திரும்பி சென்றனர். 

ஹிஜாப் வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் தேர்வை புறக்கணித்து வீட்டிற்கு திரும்பி சென்றனர். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வருவதைக் கர்நாடக அரசு தடை செய்துள்ளதை அடுத்து, அங்கு மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் உள்ள அரசு பள்ளியில் அனுமதிக்கவில்லை. இந்த விவகாரம் கர்நாடகத்தில் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து, ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் ஹிஜாப், காவி துண்டு அணிந்து வருவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதை அடுத்து பெங்களூரு, மைசூரு, மங்களுரு, கல்புர்கி, ஷிவமொக்கா, சிக்கமகளுரு, உடுப்பி, தார்வார், கோலார், துமகூரு உட்பட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 144 தடை உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறபித்துள்ளனர். தடை உத்தரவு அமலில் உள்ள மாவட்டங்களில் போராட்டம், பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று காலை சரியாக 10.30 மணியளவில் நீதிபதிகள், தங்களது இருக்கைகளில் அமர்ந்து தீர்ப்பை வாசிக்க தொடங்கினர். நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அவசியமான ஒன்றல்ல. அரசு பள்ளிகளில் ஒரே சீருடை அணிந்து வர வேண்டும் என்ற கர்நாடகா மாநில அரசு பிறப்பித்திருந்த உத்தரவு செல்லும் என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மாநிலம் யாத்கிரி மாவட்டம் சுராப்புரா தாலுக்காவில் உள்ள கெம்பாவி அரசு பியூ பள்ளியில் படிக்கும் 35 மாணவிகள் பள்ளியை விட்டு வெளியேறினர். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற இருந்த நிலையில் ஹிஜாப் வழக்கில் தீர்ப்பை அறிந்த உடன் தேர்வை புறக்கணித்து வீட்டிற்கு திரும்பி சென்றனர். மாணவிகள் ஹிஜாபை அகற்றிய பிறகு தேர்வு எழுத வேண்டும் என‌ ஆசிரியர்கள் கூரிய நிலையில், தங்களது பெற்றோர்களுடன் கலந்து ஆலோசனை செய்த பிறகு கல்லூரிக்கு திரும்ப உள்ளதாக தகவல் தெரிவித்துவிட்டு மாணவிகள் ஹிஜாப் அணிந்தவாரு தங்களது வீட்டிற்கு திரும்பி சென்றனர். இதனிடையே ஹிஜாப் தொடர்பான கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 6 மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.