ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணி மேற்கொள்ளும் பசுமை தீர்ப்பாய ஆணைக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக உரிமையாளர்களான வேதாந்தா நிறுவனம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது. மேலும் ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய தனியாக குழு அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த மனுவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து மனுவை தள்ளபடி செய்ய வேண்டும் என்றும் பசுமைத் தீர்ப்பாயத்தில் வாதிட்டது. ஆனால் தமிழக அரசின் வாதத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிராகரித்து விட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது  காற்று, நீர் மாசு ஏற்படுத்தாத வகையில் ஆலை செயல்படுவதாகவும், விதிகள் மீறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் காப்பர் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், ஆலை மூடப்பட்டதால் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து காப்பரை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்படும் சூழல் உருவாகி விடும் என்று வாதிடப்பட்டது. ஆனால் தமிழக அரசுத் தரப்பில் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆலையின் செயல்பாடுகள் மற்றும் விதிமீறல்கள் தொடர்பான முக்கியமான கோப்புகளை அவர்கள் அழித்து விடக் கூடும் என்ற வாதம் அரசுத் தரப்பில் முன்வைக்கபட்டது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாக அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது. ஆனால் அதே சமயம் உற்பத்தி பணிகளும் நடைபெறக் கூடாது என்றும் அவர் தனது உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த உத்தரவையடுத்து தமிழக அரசு சார்பில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. பிறகு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு எடுக்கப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது, ஆகையால் தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.