மேற்கு வங்கத்தில் மாநிலங்களவையின் 6-வது உறுப்பினருக்கான தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுசேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்தாவிட்டால் அந்த இடத்திற்கும் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

வருகிற ஆகஸ்டு மாதத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் மேற்கு வங்க மாநிலத்தில் மாநிலங்களவைக்கான 6 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் 5 இடங்களில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறுவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் 6-வது உறுப்பினரையும் வெற்றிகொள்ள திரிணாமுல் காங்கிரஸ்(டிஎம்சி) குறியாக இருந்து வருகிறது.

மேற்கு வங்கத்தில் உள்ள 6 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 4 உறுப்பினர்களும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு உறுப்பினரும் மாநிலங்களவையில் அங்கம் வகித்து வந்தனர். இந்நிலையி்ல் இவர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளதால் வருகிற ஆகஸ்டில் தேர்தல் நடைபெறுகிறது.

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று 211 சட்டமன்ற இடங்களை கைப்பற்றியது. இரண்டாது இடத்தைப் பிடித்து எதிர்க்கட்சியாக தேர்வாகி உள்ள காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது முன்னணி 32 சட்டமன்ற இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தன.

ஆனால் இவர்களில் காங்கிரஸ் கட்சியில் இருந்து 5 எம்.எல்.ஏ.க்களும் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. ஒருவரும் திரிணாமுல் காங்கிரஸ்கட்சிக்கு தாவிவிட்டனர்.

இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற 43 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால் எதிர்க்கட்சிகள் தனித்து நின்று ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கூட பிடிக்க இயலாத நிலையில் உள்ளனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீண்டும் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சி ஆதரவுகொடுப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் சீத்தாராம் யெச்சூரி மீண்டும் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று கூறிவருகிறார்.

இதனால் இக்கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டால் தனக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவைக்கான 6-வது உறுப்பினருக்கான தேர்தலிலும் போட்டியிட திட்டமிட்டு வருகிறது. இது மேற்கு வங்கத்தில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.