மத்திய பிரேதேச சாலைகளை ஹேமா மாலினியின் கன்னங்கள் போல் உருவாக்குவோம் என அம்மாநில காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் சாலைகள் விவகாரம் தொடர்பாக மத்திய பிரதேசத்தின் எதிர்கட்சி தலைவர் மாநில அரசை கடுமையாக சாடி இருந்தார். மாநிலத்தில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இதனை சரி செய்யும் பணிகளில் செயல்படுவதற்கு பதிலாக மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என குற்றம் சாட்டி பொறுப்பிலிருந்து தப்பியோடுகிறது. 

மாநில அரசிடம் பெரிய அளவில்  பட்ஜெட் உள்ளது. இதில் சாலைகளை சரிசெய்வதற்காக அரசாங்கம் செலவிட வேண்டும் என கூறியிருந்தார். மத்திய பிரதேச மக்கள் தொடர்பு துறை அமைச்சர் பி.சி.சர்மா இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மத்திய பிரதேசத்தில் சாலைகள் வாஷிங்டன் போல் போடப்பட்டது. தற்போது இந்த சாலைகளுக்கு என்னாச்சு? கனமழைக்கு பிறகு சாலையில் எங்கு பார்த்தாலும் குழியாக காணப்படுகிறது. சாலைகளின் தற்போதைய நிலைமை பெரியம்மை போல் காட்சியளிக்கிறது. 

 

சாலைகளை பார்ப்பதற்கு பா.ஜ.க. தலைவர் கைலாஷ் விஜயவர்கியாவின் கன்னங்கள் போல் இருக்கிறது. முதல்வர் கமல் நாத் உத்தரவின் பேரில் அடுத்த 15 நாட்களில் அந்த சாலைகள் சரி செய்யப்பட்டு, விரைவில் அந்த சாலைகள் ஹேமா மாலினியின் கன்னங்கள் போல் மென்மையாக உருவாக்கப்படும் என தெரிவித்தார். நாடாளுமன்ற பெண் எம்.பி.யான ஹேமா மாலினியின கன்னங்களை சாலையுடன் ஒப்பிட்டு பி.சி.சர்மா பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதேசமயம், 2017ல் அப்போது மாநில முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான் தனது அரசு வாஷிங்டன் சாலைகள் போன்று இங்கு சாலைகள் போட்டுள்ளதாக கூறியிருந்தார். அதனை கிண்டல் செய்துதான் தற்போது சர்மா வாஷிங்டன் சாலை என்று குறிப்பிட்டு இருந்தார்.