நாடு முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்க  வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருவதால் இதை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.  தற்போது இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 205 நாடுகளுக்கும் மேலாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.  கொரோனா வைரசால் சர்வதேச அளவில் சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75,000-ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் மார்ச் 24 முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்த போதிலும் கொரோனா தொற்று நாளுக்குநாள் வேகம் எடுத்து வருகிறது. இதுவரை இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4281-ஐ தாண்டியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 114ஆக உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றனர். இதனிடையே, ஊரடங்கு முடிய இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற ஐயம் அனைவரும் மத்தியிலும் இருந்து வருகிறது. 

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாம் என பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. பல்வேறு நிபுணர்களும் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தனை நாட்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கொரோனாவை, ஊரடங்கு நீக்கம் மேலும் அதிகரிக்கலாம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளதால் இதை பரிசீலனை செய்துவருவதாக கூறப்படுகிறது.