ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனைகள் செய்யப்படும் ஐஎம்பிஎஸ் (IMPS), என்இஎஃப்டி (NEFT) மற்றும் ஆர்டிஜிஎஸ் (RTGS) போன்ற கட்டணங்களை ஸ்டேட் பேங்க் அதிரடியாக ரத்து செய்துள்ளது. 

எஸ்.பி.ஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியாக திகழ்ந்து வருகிறது. கடந்த மார்ச் 31-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி எஸ்பிஐ வங்கியில் இண்டர்நெட் பேங்கிங் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 6 கோடி பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மொபைல் பேங்க் சர்வீஸை 1.41 பயன்படுத்துவதும் தெரியவந்தது. அத்துடன் எஸ்பிஐ வங்கியின் மார்க்கெட் பங்குகள் 18% மொபைல் பேங்கிங் மூலம் நடைபெறுகிறது என தகவல் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், ஒவ்வொரு முறை NEFT, IMPS, RTGS செய்யும் போது ரூ.2.50 முதல் ரூ.56 ரூபாய் வரையிலான ஒரு குறிப்பிட்ட தொகை கட்டணமாக பிடிக்கப்பட்டு வந்தது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  இதனிடையே, ஜூலை 1-ம் தேதி NEFT, IMPS, RTGS சேவைகளுக்கான கட்டணங்களை வங்கிகள் குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது. 

இதனை ஏற்றக்கொண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்த கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை எவ்வித கட்டணமும் இன்றி செய்துகொள்ளலாம் என ஸ்டேட் பேங்க் நிர்வாகம் அறிவித்துள்ளது.