Started Vice Presidential Election Filing petition
ஆகஸ்ட் 5-ந் தேதி நடத்தப்படும் குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. இதற்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வௌியிட்டது.
ஆனால், இதுவரை ஆளும் பா.ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியோ அல்லது காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சியோ இன்னும் தங்களின் வேட்பாளர்களை குறித்து அறிவிப்பு வௌியிடவில்லை.
இந்திய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10 ந் தேதி யோடு முடிகிறது. இதையடுத்து புதிய துணைத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
ஹமீது அன்சாரி தொடர்ந்து 2-வது முறையாக குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். கடந்த 2007ம் ஆண்டு முதல் 2012 வரையிலும், 2012ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தேர்தலுக்கான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கடந்த மாதம் 29-ந்தேதி அறிவித்தார். அதன்படி துணைக் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்குவதற்கான அறிவிக்கை இன்று வௌியிடப்பட்டது.
ஜூலை 18-ந் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசிநாளாகும். 19-ந் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனையும், திரும்பப் பெற 21-ந் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டது.
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்களை வாக்களிக்கும் தகுதியுடைய 20 பேர் முன்மொழிவதும், 20 பேர் வழிமொழிவதும் அவசியம். தேர்தல் அதிகாரியாக மாநிலங்கள் அவையின் செயலாளர் ஷம்சர் கே. ஷெரீப் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால், ஆகஸ்ட் 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும். தேர்தல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும். அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மாநிலங்கள் அவை, மக்களவையில் உள்ள 790 எம்.பி.க்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதி உடையவர்கள். வாக்குப்பதிவின் போது, இவர்கள் பயன்படுத்த சிறப்பு மை கொண்ட பேனாக்கள் வழங்கப்படும். வேறு பேனாக்களில் வாக்குச்சீட்டில் குறியிட்டால் அந்த வாக்கு செல்லாது என அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
