ஸ்ரீநகரில் செவ்வாய்க்கிழமை 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 30.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 10.2 டிகிரி அதிகம். ஏப்ரல் 17 வரை வறண்ட வானிலையும், ஏப்ரல் 18-20 வரை மழை, பனிப்பொழிவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 80 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஸ்ரீநகரில் நேற்று செவ்வாய் கிழமை வெப்பம் 30.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு சுட்டெரித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 15ஆம் தேதி, 80 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பம் தகித்துள்ளது. இது இந்த கால நேரத்தில் இயல்பை விட 10.2 டிகிரி அதிகமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் கோடைகால தலைநகரில் இதற்கு முன்னதாக ஏப்ரல் 20, 1946 அன்று அதிகபட்சமாக 31.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பகல் நேர வெப்பநிலை இயல்பை விட 10.2 டிகிரி அதிகமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இந்த பருவத்தில் சராசரி பகல் நேர வெப்பநிலை 20.2 டிகிரி செல்சியஸ் ஆகும். செவ்வாய்க்கிழமை, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள வானிலை நிலையங்களில் இயல்பை விட 8.1 முதல் 11.2 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலையாக காசிகுண்டில் 29.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. பள்ளத்தாக்கில் வானிலை ஏப்ரல் 17 வரை பொதுவாக வறண்டதாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 18-20 வரை, பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை, பனிப்பொழிவு இருக்கும். சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
