ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் தொடர்ந்து 2-வது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையோடு பனிப்பொழிவும் இருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 17-ந்தேதி முதல் மழைபெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் மலைபாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக ராம்பன் மற்றும் பன்தல் நகரங்களுக்கு இடையிலான முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் மழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால், பஸ்,லாரி போக்குவரத்து முற்றிலும் முடங்கி, சாலையில் அணிவகுத்து நிற்கின்றன. மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சாலையில் விழுந்து கிடக்கும் பாறைகள், மண்சரிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் நவீன எந்திரங்களுடன் பயன்படுத்தப்பட்டுள்ளன. பணிகளை துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளை மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது.

பாதைகள் சீரமைக்கப்பட்டு, இன்றுக்குள் போக்குவரத்து சீரடையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த சில நாட்களாக பெய்த மழையோடு, கடும் பனிப்பொழிவும் இருந்து வருகிறது. இதனால் ஏற்பட்ட குளிரால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பகலாம் பகுதியில் 20 செ.மீ.் அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. ஸ்ரீநகரில் அடுத்த சில நாட்களுக்கு குளிர் 2.7 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 5.8 டிகிரி வரை இருக்கும் எனத் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், குப்வாரா, கோகர்நங், குல்மார்க், கார்கில் நகரம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவியது குறிப்பிடத்தக்கது.