srilankan minister says that 20 crores penalty for TN fishermen

இலங்கை கடல் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் மற்ற நாட்டு மீனவர்கள் மீன் பிடித்தால் அவர்களுக்கு 20 கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்று அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் அமரவீரா தெரிவித்துள்ளார்.

100 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கிடையே கடல் பகுதியில் மீன் பிடிப்பதில் பிரச்சனை இருந்து வருகிறது. கச்சத்தீவு அருகே தமிழக கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்தாலும், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது.

இதுவரை நூற்றுக்கணக்கான மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்., இதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என வலியுறுத்தி மீனவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக இரு நாட்டு மீனவர்களிடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இதுவரை தீர்வு ஏற்படவில்லை.

இந்நிலையில் தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இலங்கை மீனவளத்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது எல்லை தாண்டி மீன் பிடித்தால் அந்த மீனவர்களுக்கு 20 கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார். வரும் 6 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

வங்கக்கடலில் எது இந்திய எல்லை? எது இலங்கை எல்லை? என்று வரையறுக்கப்படாத நிலையில் இலங்கை அரசின் இந்த அறிவிப்பு மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.