வருமான வரித் துறை சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்களை வேவு பார்ப்பதாகவும், அதற்காக இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்கிற தகவல் பரவி வருகின்றன. 

இது குறித்து நேரடி வரித்துறையின் தலைவரான பி.சி.மோடி, “கணக்கில் வராத பணத்தை நாங்கள் சமுக வலைத்தளங்கள் மூலம் வேவு பார்க்கிறோம் என்று கூறுவது தவறான தகவல். நாங்கள் சமுக வலைத்தளங்களில் ஏன் கண்காணிக்க வேண்டும்? எங்களுக்கு தேவையான தகவல்களைப் பணப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட விவரங்கள் மூலமாகப் பெற்றுக்கொள்கிறோம்.

குறிப்பிட்ட வரம்புக்கு அதிகமான பரிவர்த்தனைகள் செய்பவர்கள் கண்காணிக்கப்பட்டு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அளிக்கப்படுகிறது. அதற்கான சரியான விளக்கம் மற்றும் ஆவணங்கள் இருக்கும் போது அவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. வரி தாக்கல் செய்யும் போது ஒவ்வொருவரும் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

எனவே வரி தாக்கல் செய்யும்போது தவறு செய்திருந்தால் அல்லது வரி ஏய்ப்பு செய்திருந்தால் எளிதாகத் தெரிந்துவிடும். வரி செலுத்துபவர்கள் மற்றும் வரி துறையினரிடையே மோதல் போக்கு இல்லாமல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளையே மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

வங்கி, மியூச்சுவல் ஃபண்டு, கிரெடிட் கார்டு, பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட அமைப்புகளிடமிருந்து தேவையான தகவல்களை வருமான வரித்துறை பெற்றுக்கொள்கிறது. வரி செலுத்துவதில் இணக்கத்தை ஏற்படுத்தி, வரி செலுத்துவோரை ஊக்குவித்து, விதிமீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது மட்டுமே எங்கள் நோக்கம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.